×
Saravana Stores

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!

சென்னை : சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈரடுக்கு மேம்பால அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யாநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுமானக் கழிவுகள் அகற்றப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில்,”விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பின்பற்றாவிட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தீர்ப்பாயத்தில் நீர்வள ஆதாரத்துறை முறையிடுவது ஏன்?

செப்.30-ம் தேதிக்குள் ஆற்றில் கொட்டிய கட்டிடக் கழிவுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அகற்ற வேண்டும். இதை அக்.1-ம் தேதி நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்து, முறையாக கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்.3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

The post கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Koovam river ,National Highways Commission ,Chennai ,National South Zone Green Tribunal ,National Highways Authority ,Madurawayal ,Dinakaran ,
× RELATED கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட...