அலங்காநல்லூர்: பாலமேடு அருகே திடீரென டிராக்டர் குறுக்கே வந்ததால், அரசு பள்ளி ஆசிரியைகள் சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 4 ஆசிரியைகள் மற்றும் வேன் டிரைவர் காயமடைந்தனர். பாலமேடு அருகே முடுவார்பட்டி – வெள்ளையம்பட்டி சாலையில் மதுரையில் இருந்து நேற்று அரசு பள்ளி ஆசிரியைகள் 16 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.
வழியில் முன்னால் வந்துகொண்டிருந்த டிராக்டர் திடீரென சாலையில் குறுக்கிட்டது. இதனால் வேன் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் இதில் பயணம் செய்த ஆசிரியைகள் ரேவதி (53), உமாராணி(57), சுகந்தி(49), மகேஸ்வரி (40), டிரைவர் வீரய்யா (53) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் முடுவார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டிரைவர் வீரையா 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், ஆசிரியைகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே வந்த டிராக்டரின் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post பாலமேடு அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் சாலையோரம் பாய்ந்த வேன்: 4 ஆசிரியைகள், டிரைவர் காயம் appeared first on Dinakaran.