×

மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது தாக்கிய 6 வாலிபர்களுக்கு வலை சேத்துப்பட்டு அரசு பள்ளியில்

சேத்துப்பட்டு, செப்.19: சேத்துப்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி தலைமறைவான பகுதி நேர ஆசிரியரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை தாக்கிய 6 வாலிபர்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர் தனக்கரசு(43). இவர் அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்2 மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வர்றியா? எனக்கேட்டு ஆபாசமாக பேசி உள்ளார். இந்த ஆடியோ சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஆத்திரமடைந்து, அந்த ஆசிரியரை வழிமறித்து சாலையில் முட்டி போட வைத்து மாணவியிடம் பேசிய ஆடியோவை காட்டி தர்ம அடி கொடுத்தனர்.

அதற்கு அந்த ஆசிரியர், ‘போதையில் அந்த மாணவியிடம் ஏதோ பேசி விட்டேன்’ என கூறினார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதற்கிடையில் ஆசிரியர் தனக்கரசு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை எஸ்பி பிரபாகரன் உத்தரவின்பேரில் சேத்துப்பட்டு டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் கார்த்திகாதேவி, எஸ்ஐக்கள் நாராயணன், சிவகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் பதுங்கியிருந்த ஆசிரியர் தனக்கரசுவை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. மேலும், ஆசிரியரை தாக்கிய 6 வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது தாக்கிய 6 வாலிபர்களுக்கு வலை சேத்துப்பட்டு அரசு பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : Sethupattu ,Thiruvannamalai district ,Sethupattil ,
× RELATED சம்பா பருவம் தொடங்கிய நிலையில்...