×
Saravana Stores

சந்திரயான்-4, விண்வெளி மையம் உட்பட பல விண்வெளி திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.24,000 கோடியில் உர மானியம்

புதுடெல்லி: சந்திரயான்-4, விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கும் ரூ.24,000 கோடியில் உரமானியம் வழங்கவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
* சந்திரயான்-3 திட்டத்தை தொடர்ந்து, அடுத்த முயற்சியாக, சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புவதை சந்திரயான்-4 திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ. 2,104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ. 11,170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ககன்யான் திட்டத்துக்காக மொத்தம் ரூ. 20,193 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2028ல், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட உள்ளது. இத்திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* குறைந்த செலவிலான ‘என்ஜிஎல்வி’ என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான விண்கலத்தை வடிவமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்(விஓஎம்) என்ற திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.1,236 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு ரபி பருவத்திற்காக, பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.24,475.53 கோடி மானியம் வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
* பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.79,156 கோடி செலவிலான ‘பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்’ திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ரூ.56,333 கோடியை ஒன்றிய அரசு வழங்கும். மீதமுள்ள ரூ.22,823 கோடியை அந்தந்த மாநில அரசுகள் செலுத்தும்.
* ஐஐடி, ஐஐஎம்களுக்கு இணையாக ஐஐஐசி என்ற கல்வி நிறுவனம் தொடங்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுமைகளை உருவாக்குபவர்களாக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படுத்தப்படும்.

The post சந்திரயான்-4, விண்வெளி மையம் உட்பட பல விண்வெளி திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.24,000 கோடியில் உர மானியம் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Chandrayaan ,Space Centre ,New Delhi ,Chandrayaan- ,Space Research Centre ,Modi ,Dinakaran ,
× RELATED மசோதா காலாவதி ஆன நிலையில் திருமண வயது...