சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை எளிமைப்படுத்த, தமிழ்நிலம் என்ற இணையதள மென்பொருள் வசதி தொடங்கப்பட்டது.
இந்த புதிய மென்பொருள் மூலமாக, மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும். அதுமட்டுமல்ல, கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. இந்த தமிழ்நிலம் மென்பொருள் வாயிலாக பட்டா பிரதிகள், ஆன்லைன் முறைக்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் – பதிவாளர்கள் வலியுறுத்துவதால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது.
பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைனிலேயே எளிய முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வரச் சொல்வது தேவையில்லாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, பதிவுத்துறைக்கு நில அளவைத் துறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகிதப் பிரதிகளை கேட்க கூடாது. இந்த சொத்துகளின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய்த் துறையின் தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விவரங்களை, சார்-பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காகிதப் பிரதி கேட்டு, பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.