பெங்களூரு: கன்னட திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் இருப்பதால் கர்நாடக மகளிர் ஆணையத்திடம் நடிகை சஞ்சனா கல்ராணி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
மலையாளத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை நீதிபதி ஹேமா கமிட்டி அம்பலப்படுத்தியது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் திரைத்துறையில் பணியாற்றுபவர்களின் பாலியல் சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘கன்னட திரையுலகில் பெண் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளையான சஞ்சனா கல்ராணி அறக்கட்டளையில் இருந்து, தனியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம். இதனால் திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும், ‘சாண்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும்’ என்று கூறினார்.
இதுகுறித்து கர்நாடக மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கூறுகையில், ‘திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்காக தனியாக குழு அமைப்பது குறித்து திரைத்துறையினர் முதன்முறையாக கூட்டம் நடத்தி உள்ளனர். 10க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்ட எந்தவொரு அமைப்பிலும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு இருக்க வேண்டும் என்பது சட்டமாகும்’ என்றார்.
The post கன்னட திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்; கர்நாடக மகளிர் ஆணையத்திடம் நடிகை சஞ்சனா கல்ராணி மனு: தனி அமைப்பு ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.