×
Saravana Stores

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

நான் அவனி(ளி)ல்லை

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

‘‘நான் அவனில்லை” இந்த வார்த்தைகள் கொடுக்கும் வீரியத்தின் அளவிலுள்ள வீழ்ச்சியையும், அளப்பறியா வெற்றியையும் அத்தனை எளிதாக எந்தவொரு மனிதனாலும் கடக்க முடியாது என்பதே வலி மிகுந்த உண்மையாகும்.அண்ணாமலை படத்தில், நடிகர் ரஜினி, தன்னுடைய நண்பர் சரத்பாபுவை வெற்றியடைந்து, காரில் தனியாக சென்று ஒரு இடத்தில் ரஜினி நின்றிருப்பார். அந்த இடத்தில், ஒருவர் தன்னுடைய மாடுகளுடன் சென்று கொண்டிருப்பார்.

அப்பொழுது ரஜினி, அந்த மாடு மேய்ப்பவரையும், மாடுகளையும் பார்த்து ஒரு துளி கண்ணீர் சிந்துவார். உண்மையாகவே, ரஜினி ஆசைப்பட்ட வாழ்க்கை எதுவென்றால், மிக எளிமையாக மாடுகளை மேய்த்து, குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்வதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால், ஒரு துரோகத்தினால், ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அவராக இல்லாமல், நண்பனை வெல்ல வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையை வாழ்ந்து இருப்பதாக அந்தப் படம் முடிவடைந்து இருக்கும்.

இதே போல், காவலன் திரைப்படத்தில், விஜயை அசின்தான் விரும்புவார். ஆனால், அப்பாவுக்கு பயந்து தன்னுடைய தோழியை விஜயைப் பார்க்க அனுப்பிவைப்பார். அந்தத் தோழியும், விஜய் கட்டிப்பிடித்து அழுதவுடன் உண்மையைச் சொல்லாமல், விஜயின் மனைவியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில், தான் அப்படி ஒரு பெண்ணல்ல, சந்தர்ப்ப சூழ்நிலையால், அசினுக்கு துரோகம் செய்யும்படியாக மாறிப் போனேன் என்று டைரியில் எழுதியிருப்பார்.

இந்த இரு படத்திலும், இருவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் நோக்கம் வேறாக இருக்கும். ஆனால், வாழ்ந்த விதம் வேறாக இருக்கும் என்ற உண்மையை பற்றிய தெளிவுதான், இன்றைக்கு நமக்கு மிகவும் தேவைப்படுகிறது.

ஏனென்றால், இங்கு ஒவ்வொரு மனிதனும் உளவியல் ரீதியாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு வருகின்றான். சிலர் சுயம்புவாக வாழ்க்கையை கொண்டு வருவார்கள், சிலர் பலரின் துணையோடு வாழ்க்கையை கொண்டு வருவார்கள். அதைத் தான் பெர்சோனா (Persona) என்று கூறுவார்கள். எனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? நான் அப்படிப்பட்ட ஆளில்லை, கரகாட்டம் படத்தில் கவுண்டமணி, செந்திலைப் பார்த்து ஏன்டா, என்னையப் பார்த்து இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்ட? இந்தக் கேள்விகள் எல்லாமே ஒவ்வொரு மனிதனும் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக, உறவுகளுக்காக கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்த பிம்பத்தைப் பார்த்து கேட்ட கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் கோபப்படுவார்கள்.

அப்படிப்பட்ட பிம்பத்தின் மீது சிறு கீறல் விழுந்தாலும், அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த வெறுமையையும், அவமான உணர்வையும் அத்தனை எளிதாக மனிதனால் கடக்க இயலாது.தான் கட்டமைத்த பிம்பத்தை, இந்த இணைய உலகில் எப்படி காப்பாற்றுவது, எப்படி மீட்டெடுப்பது என்பது இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மோனிகா லெவின்ஸ்கி என்பவர் அவமானமும், பிழைத்திருப்பதும் (Shame & Survival) என்ற கட்டுரையை வானிட்டி ஃபேர் (Vanity Fair) என்ற இதழில் வெளியிட்டுள்ளார். இவரை நினைவுள்ளதா? பில்கிளிண்டன் அதிபராக இருந்த நேரத்தில், அந்த மாளிகையில் வேலை பார்த்தவர்.

அந்த நேரத்தில், இவருக்கும், பில் கிளின்டனுக்கும் ரகசிய உறவு இருப்பதாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. அதை மீறி, தான் யார் என்றும், தன்னுடைய நடத்தை மற்றும் தன்னுடைய திறமை எதுவென்றும் தனியாக நின்று இந்த உலகம் முழுக்க ஒரு கட்டுரையால் மறுபடியும் மீண்டு எழுந்தார். ஏனென்றால், மோனிகாவுக்கு, மோனிகாவின் வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால்தான், பாலியல் சர்ச்சை எல்லாம் ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று சமூகத்திடம் நிரூபித்துள்ளார்.நம் உலகில் டேல்ஸ் (Tales) அதாவது வாய்மொழிக் கதைகள் என்று கூறுவார்கள். விஷ்ணுவும், பிரம்மனும், சிவனின் அடிமுடி தேடிய வரலாறு போல் தான், இந்த வாய்மொழிக் கதைகளும் அடங்கக் கூடியதாகும்.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே\” — திருமந்திரம்.

இம்மாதிரியான கதைகளுக்கு நமது ஆன்மிகக் கதைகள் மூலம் இன்னும் பலத்த வரவேற்போடு நம் மக்களிடையே அநேக வரவேற்பு இருக்கிறது. விஷ்ணுவும், பிரம்மனும் அடிமுடியைத் தேடினார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் நம் உலகத்தில், அதாவது உதாரணத்துக்கு, நம்மைப் பற்றி நமக்கு நன்கு பழக்கமானவர்களே பல அவதூறுகளை வாய்மொழிக் கதைகளாக பரப்புவார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாக்கும், அவர்களுடன் சேர்ந்து அந்த கதைகளுக்கு ஒவ்வொரு விதம் விதமாக வடிவமைப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஒரு முடிவிலா முடிவாகத் தான் போய்க் கொண்டிருக்கும்.

இம்மாதிரியான வாய்மொழிக் கதைகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்க்கையை நரகமாக மாறி இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் என்ன தான் ஒரு விஷயம் செய்தாலும், நாம் உருவாக்கி வைத்த அந்த Persona பிம்பம் அடி வாங்கும் போது, அதை தாங்க முடியாதவர்கள், மனரீதியான பிரச்னைகளுக்குள் சென்று அவதிப்பட ஆரம்பிப்பார்கள். இதன் பாதிப்பால், அவர்கள் கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் தான், அதே டிஜிட்டலில், தன்னைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார்கள். நான் முதலில் சொன்னது போல், நமக்கே நம்மைப் பற்றி முழுதாக தெரிந்து விடாது. அந்தளவிற்கு மனித மூளை மிகவும் சக்தி வாய்ந்தது. சக மனிதனுக்கு உடலுக்கு முடியவில்லை என்றால், உடனே ஓடிப் போய் உதவுவதும் நாமே, அதே நேரத்தில் பணத்திற்காக வீட்டிலுள்ள பெற்றோர்களை ஏமாற்றுவதும் நாமே. நாமளா இப்படி செய்தோம் என்று நமக்கே நம்மைப் பற்றி சில நேரங்களில் ஆச்சரியமாகவும், சில நேரங்களில் சலித்தனமாகவும் இருக்கும்.

மோனிகா லெவின்ஸ்கி வாழ்க்கையை போல், திடீரென்று புரட்டிப் போட்டாலும், நமக்கான நம்முடைய நல்ல பக்கங்கள், நல்ல திறமைகள் அனைத்தும் இந்த உலகத்திற்கு தேவையானது. சில நேரங்களில் வாழ்க்கை நம்மைப் பார்த்து, நான் அவனில்லை என்று சொல்ல வைத்தாலும், சில நேரங்களில் என்னைப் போல் இருப்பானா என்றும் சொல்ல வைக்கும்.அதற்கு நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள், நாம் கட்டமைத்த பிம்பங்கள் எத்தனை விதமாகவோ அல்லது சில்லு சில்லாகவோ உடைந்து போனாலும் கூட, நம்மைப் பற்றிய, நம் வாழ்க்கையைப் பற்றிய நோக்கத்தை என்றைக்கும் மறந்துவிடக்கூடாது. அந்த நோக்கம் தான், நம்முடைய அத்தனை கீழ்மையான செயல்பாடுகளில் இருந்து மீட்டெடுத்து, மீண்டு புது மனிதனாக வலம் வர வைக்கும். மனிதனுடைய மூளையில் வாழ்க்கை கொடுக்கிற காயங்களில் இருந்து மீண்டு வருவதற்கு பதிலே இல்லை.

ஆனால், ஆறிய தழும்புகளுடன், தன்னைத் தெளிவாக அறிந்து கொள்ளும் மனிதனுக்கு துன்பத்தில் இருந்து ஆசுவாசம் அடைய காலம் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் இங்கு மனமே வரமும், சாபமும் கூட. எத்தனை பெரிய வரலாற்று அளவில் மனிதன் வீழ்ச்சி இருந்தாலும், மனிதன் தன்னைத்தானே மனதளவில் புதுப்பித்துக் கொள்வான்.ஏனென்றால், இங்கு எல்லாமே வாழ்க்கையின் நோக்கம் தான். நான் ஏன் பிறந்தேன், நான் ஏன் இங்கு வாழ்கிறேன்? நான் ஏன் இவனை/இவளை காதலிக்கிறேன்? நான் ஏன் இந்த வேலையைத் தொடர்ந்து செய்கிறேன்? நான் ஏன் என் வீட்டிற்கோ/முதலாளிக்கோ இத்தனை விசுவாசமாக இருக்கிறேன்? இப்படி நம் முன் நிற்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், நம்முடைய ஆழ் மனதிலுள்ள நம்முடைய அடையாளத்தின் நோக்கத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டுமென்பதேயாகும்.

அதனால் தான், சோசியல் மீடியாவில் பலவிதமான ரீல்ஸில் அடிக்கடி சொல்வது, உங்களை இழந்து எதையும் செய்யத் துணியாதீர்கள். அதன் பிறகு, வாழ்வதே கடினமானது என்பார்கள். ஏனென்றால், நம்முடைய ஆழ்மனது என்பது குரங்கு போன்றது. நம்மை இத்தனை கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் இடையில் ஓரளவு சமூகம் சொல்லும் செயல்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தடம் மாறினால், உள்ளே இருக்கும் ஆழ்மன குரங்கு, இது நீ இல்லையே என்று சுரண்ட ஆரம்பித்து விடும். அதனால் தான் கடவுளுக்கு பயப்படுவதை விட, அவரவர் மனசாட்சிக்கு மனித இனம் ஓரளவு பயந்து கொண்டே இருக்கிறது.

ஜெயகாந்தன் சொல்வது போல், நான் ஒரு போதும் எதையும் அவமானதாக கருதியதில்லை, ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பதேயாகும். அது போல், உங்களை நீங்கள் என்றைக்கும் முழுமையான நபர் இது தான் என்று வரையறை செய்யாதீர்கள். சிறுசிறு குறைகளுடன் தான் நாம் என்றைக்கும் இருப்போம். அந்த குறைகள் வெளியே தெரிந்தாலும், அதிலிருந்து உங்களை உடனே மீட்டு எடுக்க உங்களுக்கு நீங்களே உதவுங்கள். இன்றைய காலக்கட்டத்திற்கு தன்னை மீட்டு எடுக்கும் யுக்தி தெரிந்தவன் மிகச்சிறந்த திறமைசாலியாவான்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr ,Awani ,Li ,Lai ,Gayatri Mahati ,
× RELATED குப்பையான உடலை தேற்றும் குப்பைக்கீரை!