×
Saravana Stores

கேட்டதை அளிக்கும் நாமம்!

சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா

இதற்கு முந்தைய நாமமான ஸ்ரீமந் நகர நாயிகா… என்று பார்த்தோம். அந்த நகரம் எப்படியிருக்கிறது என்பதையும், உலோக மயமாக இருப்பதையும் ரத்தினமயமாக இருப்பதையும் பார்த்தோம். பிறகு, நமது அந்தகரணங்களாக உள்ளேயே இத்தனை கோட்டைகளும் இருப்பதையும் பார்த்தோம். இதெல்லாம் ஸ்ரீநகரத்தின் வெளியில் இருக்கக்கூடிய வர்ணனைகள். கோட்டைகளுக்கு நடுவே இருக்கக்கூடிய தோட்டங்கள், அந்த நீர் நிலைகள் போன்றவற்றை பார்த்தோம். இவை யாவுமே அந்த சாதகனின் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், காரண சரீரம் வரைக்கும் குறிப்பதையும் பார்த்தோம். இப்படியெல்லாம் பார்க்கும்போது இந்தப் பிரபஞ்சமே அவனுக்கு நகரமாக இருப்பதைப் பார்த்தோம்.

மேலும், இப்போது ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா, ஸ்ரீமந் நகர நாயிகா என்கிற இரண்டு நாமங்கள் கூறும் இடத்தை கொஞ்சம் long shot அல்லது aerial shot அல்லது பறவைப் பார்வையில் பார்க்கும்போது, மூன்று ஸ்ருங்கம் என்கிற சிகரங்களும், அடுத்து இன்னும் நெருங்கும்போது கோட்டைகளும் அகழிகளும் நீர் நிலைகளும் உள்ள ஸ்ரீநகரத்தையும் பார்க்கின்றோம். இப்போது இன்னும் நெருக்கமாகப் போகும்போது அம்பிகையான அம்பாள் இருக்கக்கூடிய அந்த ஸ்தானத்தைப் பார்க்கிறோம். அங்கே சிந்தாமணி க்ருஹம் (வீடு) . அதாவது இல்லத்தில் வாசம் செய்கிறாள் என்று பார்க்கிறோம். இப்படிச் சுற்றிலும் இருக்கின்ற கோட்டைகளுக்கு மத்தியிலுள்ள அரண்மனையைப் பார்க்கின்றோம். அந்த அரண்மனைக்குப் பெயர்தான் சிந்தாமணி க்ருஹம் என்று பெயர். அரண்மனை என்று சொன்னாலும் சரி, வீடு என்று சொன்னாலும் சரி… அம்பாள் வசிக்கக்கூடிய இடமே சிந்தாமணி என்பதாகும்.

இதற்கு ஏன் சிந்தாமணி க்ருஹம் என்று அழைக்கிறோம் என்று பார்ப்போமா… இதற்கு முன்பு சொன்ன கோட்டைகள் எல்லாம் உலோகங்களாகவும், ரத்னங்களாகவும் ஆனது என்று பார்த்தோம். இது சிந்தாமணி என்கிற மணிகளினாலேயே கட்டப்பட்டதால் இதற்கு சிந்தாமணி என்று பெயர். நம்முடைய புராணங்களில் மூன்று விஷயங்கள் தேவலோகத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள். ஒன்று காமதேனு, இரண்டு கற்பக விருட்சம், மூன்றாவது சிந்தாமணி. காமதேனு என்கிற பசு, கற்பக விருட்சம் என்கிற விருட்சம், மூன்றாவதாக சிந்தாமணி என்கிற ரத்தினக்கல். இந்த மூன்றுமே நாம் நினைத்ததை நிறைவேற்றி வைக்கக் கூடியது. மூன்றையுமே தரக் கூடியது. இப்போது சிந்தாமணி என்பது மற்ற ரத்தினங்களையெல்லாம் விட மிகமிக மதிப்புடையதாக விளங்குகிறது. ஏனெனில், மற்ற கற்களையெல்லாம் விட இது நினைத்ததையெல்லாம் அளிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்தக் கல்லே இத்தனை விலைஉயர்ந்ததாக இருக்கிறதே இதனால் ஒரு அரண்மனை கட்டினால் எப்படியிருக்கும் என்றுதான் இங்கு சிந்தாமணி க்ருஹமாக அம்பிகையின் வாசஸ்தலம் அமைந்திருக்கிறது.

இதற்கு முந்தைய இரண்டு நாமங்களிலும் லலிதா ஸ்தவ ரத்தினத்தில் துர்வாசர் என்ன சொல்கிறாரோ அதை வைத்துக் கொண்டுதான் பார்த்துக்கொண்டே வருகின்றோம். அவர், இந்த சிந்தாமணி க்ருஹத்தின் வர்ணனையில், ஸ்தவ ரத்தினத்தில் என்ன சொல்கிறார் எனில், சிந்தாமணி கண ரசிதம் என்று சொல்கிறார். சிந்தாமணி ரசிதம் என்றால் சிந்தாமணி கல்லினுடைய கூட்டங்களால் ஆனது. சிந்தாமணி கல்லினுடைய கூட்டங்களால் கட்டப்பட்டது. கோயிலையோ அல்லது வீட்டையோ எப்படி கருங்கற்கலாலோ அல்லது செங்கற்களினாலோ கட்டுவோமோ அப்படியேதான் சிந்தாமணி என்கிற கற்களை கொண்டுதான் கட்டப்பட்டிருக்கிறது என்று பொருள்.

உயர்ந்த ஸ்தானம் மட்டும்தானா அல்லது வேறு என்ன இருக்கிறது என்றும் பார்க்க வேண்டுமல்லவா?

இந்த சிந்தாமணியினால் வீடு கட்டும்போது அதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இது நாம் நினைத்ததைக் கொண்டு வரும். நினைத்ததை நடத்தும். அது சரி… இப்போது வீடே சிந்தாமணியில் கட்டியிருந்தால் என்ன ஆகும். என்னென்னவெல்லாம் நினைக்கப்படுகின்றதோ… அல்லது என்னென்னவெல்லாம் சங்கல்பிக்கப்படுகின்றதோ… அதெல்லாம் நடக்கும். ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. என்னவெனில், வேடிக்கையாக ஒரு கதை சொல்வது வழக்கம்.

ஒருவர் கற்பக விருட்சத்தின் அடியில் படுத்திருந்தார். வீடு வேண்டும். செல்வம் வேண்டும் என்றெல்லாம் நினைத்தவுடன் எல்லாம் வந்தது. ஆஹா… நாம் நினைத்தவுடனேயே இத்தனையும் வருகின்றதே என்று ஆச்சரியப்பட்டுப் போனார். ஆனால், நாம் நினைக்க நினைக்க வருகின்றதே என்று இவனுடைய மனதினுடைய சுபாவத்தினால் திடீரென்று ஒரு புலி வந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தான். உண்மையிலேயே ஒரு புலி வந்து விட்டது.

இந்தக் கதை எதை அறிவுறுத்துகிறதெனில், நினைத்துக்கொண்டேயிருப்பது என்பதல்ல. எப்படி நினைப்பது என்று தெரிய வேண்டும். ஏனெனில், நல்ல விஷயங்கள் எப்படி நடக்கின்றதோ அதுபோலவே தேவையில்லாததும் நடக்கும். அதனாலேயே ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிந்தாமணி என்பது அம்பாளுக்கு மட்டுமே உரிய ஸ்தானம். ஏனெனில், அவள் மட்டும்தான் இந்த நினைப்புகளை எல்லாம் கடந்து இருக்கிறாள். அவள் அந்த சிந்தாமணி என்கிற க்ருஹத்தில் உட்கார்ந்திருந்து கொண்டு என்னவெல்லாம் சங்கல்பம் செய்கிறாளோ, அதுதான் இங்கு சிருஷ்டியாக விரிகிறது. அவள்தான் அந்த சிந்தாமணிக்கே சக்தியை கொடுக்கக் கூடியவளாகவும் இருக்கிறாள். அவளின் சங்கல்பத்தால் எல்லாமும் இங்கு நடக்கிறது.

இந்த சிந்தாமணி க்ருஹத்திற்கு நான்கு வாயில்கள் இருக்கின்றன. அந்த நான்கு வாயில்களையும் கடந்து உள்ளே போனால், சக்ராஹாரமான ஒரு பீடம். மகாமேரு பீடம் இருக்கிறது. அந்த மஹாமேரு பிந்து ஸ்தானத்தில்தான் அம்பாள் இருக்கிறாள். இந்த சிந்தாமணி கிருஹத்தினுடைய தென் கிழக்கு மூலையில் அதாவது அக்னி மூலையில், அம்பாள் உற்பத்தியான சிதக்னி குண்டம் இருக்கிறது. நிருதி மூலையில் அதாவது தென்மேற்கு மூலையில் அம்பாளுடைய ஸ்ரீசக்ர ராஜரதம் இருக்கிறது. அதற்கடுத்து வாயு மூலையில் மாதங்கியினுடைய ரதம் – இதற்கு கேய சக்ர ராஜரதம் இருக்கிறது. இதற்குப் பிறகு ஈசான்யத்தில் வாராஹியினுடைய ரதம் கிரி சக்ர ராஜரதம் இருக்கிறது. இதெல்லாம் சிந்தாமணி க்ருஹத்தில் இருக்கிறது. நாம் ஒரு அரண்மனையில் நுழைந்தவுடனே போர்டிகோவில் எப்படி கார் நிற்குமோ, அதுபோல அம்பிகையினுடைய அரண்மனையில் இவ்வாறாக ரதங்கள் அமைந்திருக்கின்றன. இது அந்த க்ருஹத்தின் அல்லது இல்லத்தின் வர்ணனை.

இந்த வர்ணனையெல்லாம் பார்த்து விட்டு கொஞ்சம் இந்த நாமத்தின் பொருளை உள்முகமாக அல்லது அந்தர் முகமாக திருப்பினால், சிந்தாமணி என்கிற வார்த்தையில் சிந்தா என்பது நம்முடைய மனதை குறிக்கின்றது. மணி என்பது நம்முடைய மனதினால் என்ன சிந்திக்கின்றோமோ அதைத் தருவதாகும்.

இதற்கு முந்தைய நாமங்களில் சாதகனின் மனதை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்றெல்லாம் விரிவதை பார்த்தோம். இங்கு சிந்தாமணி என்று சொல்லும்போது இந்த சாதகனின் மனமானது எப்படி transform ஆகிறது என்பது முக்கியமான விஷயமாகும். அப்படியெனில், மனதினுடைய தன்மை என்னவென்று பார்க்க வேண்டும். மனதிற்கு ஒரு fluidity இருக்கும். ஒரு கட்டற்ற தன்மையோடு செயல்படும். இந்திரியங்களின் வசப்பட்டு ஓடியபடியே இருக்கும். நீருக்கென்று வடிவம் எதுவுமே கிடையாது. எந்த பாத்திரம் இருக்கின்றதோ அதன் வடிவத்தையே நீரும் எடுத்துக் கொள்ளும். நம்முடைய மனதிற்கென்று ஒரு வடிவம் இருக்காது. தனிப்பட்ட சுவை கிடையாது. சர்க்கரை போட்டால் இனிக்கும். உப்பு போட்டால் துவர்க்கும். அதுபோல கண்ணோடு சேர்ந்தால் கண்ணினுடைய தன்மையை வாங்கிக் கொண்டு பார்வையாகவே ஆகிவிடும். காதோடு சேரும்போது தொடுதல் உணர்ச்சி. இப்படி நீர் எப்படி ஒன்றோடு சேரும்போது அதன் வடிவத்தை எடுத்துக் கொள்கிறதோ அதுபோல இந்த மனதும் இந்திரியங்களுடைய தன்மையை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றது.

சிந்தா என்பது மனசு. மணி… மனமாகிய மணி. ஏன் மனமாகிய மணி… என்று பார்ப்போமா… இதற்கு முந்தைய நாமத்தில் நீர்தான் கெட்டிப்பட்டு ரத்தினமாக மாறுகின்றது என்று பார்த்தோம். உதாரணமாகப் பார்த்தால் முத்து. இந்த நீர்தான் சிப்பிக்குள் சென்று முத்தாக மாறுகின்றது. இதற்கு முன்பு இந்த சாதகனுக்கு அம்பாளின் தரிசனம், சிவசக்தி சொரூபம், அந்த ஸ்தானம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டே வருகின்றான். அவன் அந்த உபாசனையில் அந்த ஒருமைப்பட்ட தியானத்தில் இருக்கும்போது என்ன ஆகிறதெனில், நீர் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கின்ற fluidtityல் இருக்கின்ற மனமானது கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப் படுகின்றது.

ஒரு துளி நீரானது எப்படி கெட்டிப்பட்டு, எப்படி முத்து என்கிற ரத்தினமாக மாறுகின்றதோ… அதுபோல இவனுடைய ஓடிக் கொண்டே இருக்கக் கூடிய மனதானது கொஞ்சம் கொஞ்சமாக உள்முகமாக ஆகி ஆகி… கெட்டித் தன்மை வந்து.. fluidity ல் இருக்கின்ற மனசானது ரத்தினமான மனதாக மாறுகின்றது. அப்போது அந்த மனசானது வெறும் சிந்தாவாக இல்லாமல்… சிந்தாமணியாக மாறுகின்றது. அப்போது மனசே மணியாக மாறுகின்றது. எப்போது இது மணியாக மாறுகின்றதெனில்… அந்தர்முகமாக செயல்படும்போது. பஹிர்முகமாக அதாவது வெளிமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அசுத்தமான வாசனைகளால் சூழப்பட்டால் அசுத்தமாகவும், சுத்தமான வாசனைகளால் சூழப்பட்டால் சுத்தமாகவும் மாறும். ஆனால், அந்தர்முகமாக செயல்படும்போது ஒரு கெட்டித் தன்மை வந்து இறுகி… மணியாக மாறுகின்றது அந்த மணியே இங்கு சிந்தாமணி.

இந்த மனசுக்கு சிந்தாமணி என்கிற நிலை வரும்போது, வெறும் மனசாக இருந்தது சிந்தாமணியாக மாறிவிட்டது. சிந்தாமணி என்கிற மனசே அது வெளியில் எங்கும் செல்லாமல்… உள்நோக்கி சொரூபத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளும்போது சொரூபம் எங்கிருந்து ஸ்பூரிக்கின்றது என்று பார்க்கிறான். அப்படி அந்த சாதகன் பார்க்கின்றபோது அது தன்னுடைய ஹ்ருதய ஸ்தானத்திலிருந்து ஸ்பூரிக்கின்றது என்கிற உண்மையை அந்த சாதகன் அறிகின்றான்.

(சுழலும்)

The post கேட்டதை அளிக்கும் நாமம்! appeared first on Dinakaran.

Tags : Chintamani Kruhanthasta ,Sriman ,Sri Nagar ,
× RELATED அகிலம் காப்பாள் ஆதிநாயகி