- அதிசி
- தில்லி
- முதல்வர்
- கெஜ்ரிவால்
- புது தில்லி
- முதலமைச்சர்
- முதல் அமைச்சர்
- அமலாக்கத் துறை
- சிபிஐ
- ஏ.டி.சி.
- கவர்னர்
- தின மலர்
புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக அடிசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கு அடிசி ஆளுநரிடம் உரிமை கோரினார். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற்ற போதிலும் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் மற்றும், தலைமைச் செயலகத்திற்கு செல்லக் கூடாது, துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசு கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்கிற கடுமையான நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.
இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கெஜ்ரிவால் கடந்த 15ம் தேதி அறிவித்தார். அதன்படி நேற்று மாலை ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று காலை நடந்தது. இதில், அமைச்சர் அடிசியின் பெயரை கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அடிசி உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்களுடன் மாலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் வழங்கினார். அடுத்த சிறிது நேரத்திலேயே, புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள அடிசி, புதிய ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநரிடம் கோரினார். கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சக்சேனா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும், அடிசியை ஆட்சி அமைக்க அழைத்து, பதவியேற்பு விழாவிற்கான தேதியை ஆளுநர் வழங்குவார். இந்த நடைமுறைகள் முடிய சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
புதிய முதல்வராக அடிசி பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கான சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் 26, 27ம் தேதிகளில் கூட்டப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த 5 மாதங்கள் அடிசி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும். புதிய முதல்வராக அடிசி தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் டெல்லி அரசியலில் நிலவி வந்த பரபரப்பு அடங்கி உள்ளது.
* யார் இந்த அடிசி?
நிதி, கல்வி மற்றும் வருவாய் உள்ளிட்ட 14 துறைகளை வைத்திருக்கும் அடிசி, கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது ஆட்சியை சிறப்பாக வழிநடத்தியவர். பொதுமக்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை விவகாரத்தில் அரியானா அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரையில் சென்று அழுத்தம் கொடுத்து அதனை தீர்த்து வைத்தவர். அதேப்போன்று சுகாதாரத்துறையை மேம்படுத்தியவர், ஏன் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் டெங்குவை கட்டுப்படுத்தும் திட்டம் உட்பட அனைத்தையும் சிறப்பாக அமைச்சர் அடிசி மேற்கொண்டார். மேலும் டெல்லி மக்களிடமும் நல்லதொரு பெயரையும் வாங்கி உள்ளார்.
* மீண்டும் கெஜ்ரிவாலை முதல்வர் ஆக்குவேன்
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அடிசி, ‘‘கெஜ்ரிவால் என்னை நம்பி, எம்எல்ஏவாகவும், பின்னர் அமைச்சராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் வேறு ஏதாவது கட்சியில் இருந்திருந்தால், கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கி காட்டுவேன். அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பேன்’’ என சபதமிட்டார்.
* 3வது பெண் முதல்வர்
டெல்லியில், சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்ஷித் ஆகியோருக்கு பிறகு 3வது பெண் முதல்வராக அடிசி பதவியேற்க உள்ளார். சுஷ்மா சுவராஜ் கடந்த 1998ம் ஆண்டு சுமார் 52 நாட்கள் டெல்லி முதல்வராக இருந்தார். காங்கிரசின் ஷீலா தீக்ஷித் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் appeared first on Dinakaran.