மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்த பிரச்னை ஒருபுறமிக்க, இதை விட பெரிய பிரச்னையாக நாட்டின் மக்கள் தொகை மிக வேகமாக சரிந்து வருவது அதிபர் புடின் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் 1999க்குப் பிறகு மிகவும் குறைந்துள்ளது. தற்போது ரஷ்ய பெண்களின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.5 குழந்தைகள் என்ற கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்போது இருக்கும் நிலையான மக்கள்தொகையை பராமரிக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் தேவைப்படும் நிலையில் இது கணிசமாக சரிந்து வருகிறது. உக்ரைன் போர் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இதனால், எப்படியாவது குழந்தை பிறப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்ய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் அளித்த பேட்டியில், ‘‘குழந்தை பெறாமல் இருப்பதற்கு, வேலையில் பிஸியாக இருப்பதாக கூறுவது சரியான காரணம் இல்லை. ஒருநாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்பவர்கள் நேரமில்லை என கூறக்கூடாது. வாழ்க்கை வேகமாக பறக்கிறது. எனவே உணவு இடைவேளை, டீ டைம் போன்ற நேரங்களை நெருக்கமான உறவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார். இந்த விஷயத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க அதிபர் புடினும் மக்களை ஊக்கப்படுத்தி உள்ளார். இதற்காக 24 வயதுக்கு உட்பட்ட பெண் களின் முதல் குழந்தைக்கு 8,500 பவுண்ட் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்கான அணுகலை தடுக்க வேண்டும், விவகாரத்து கட்டணம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளும் சில மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
The post அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு appeared first on Dinakaran.