மஞ்சூர்: மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொழிற்சாலையில் உறுப்பினர்களாக இருந்து, தங்களது தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்ற தேயிலை உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒரு மணிக்கு தங்களது பணியை முடித்து விட்டு வீடு திரும்பினர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் லேசான புகை வந்தது.
திடீரென தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த தேயிலை கழிவுகளில் ஏற்பட்ட தீ மள,மளவென பரவியது. இதை தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தினர். இதை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் குன்னூரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் தேயிலை தூள் மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மஞ்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மஞ்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ appeared first on Dinakaran.