×
Saravana Stores

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா ஆகியோர் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அப்போது பவன் கேரா பேசியதாவது; விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 100% நீர் பாசனம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும். தேர்தலில் வென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாள்களில் வெளியிடப்படும். அரசுப் பணிகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். ஆட்சி அமைத்த 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

The post ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Congress party ,Srinagar ,Congress ,Chief Spokesperson ,Pawan Khera ,Jammu ,Kashmir Regional Congress ,President ,Tariq Hamid Khera ,Jammu and Kashmir… ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு...