×

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி : கட்டிமேடு அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்றனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து பேசும்போது: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்றில் ஏற்படும் மாசுக்களை குறைக்கவும் ஓசோன் படலத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓசோன் அடுக்கு என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பாதுகாப்பு வளையம் என்பதை மாணவர்கள் அறியவேண்டும் என்று கூறி ஓசோன் படலம் இல்லாத பூமி கூரை இல்லாத வீடு போன்றது என்றார்.பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது ஓசோன் படலம் என்றும் சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்கள் தோல் புற்றுநோய்கள், கண் பாதிப்புகளை ஏற்படுத்தி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களையும் சேதப்படுத்தும்.

இவற்றில் இருந்து பாதுகாப்பது ஓசோன் படலம் என்று விளக்கினார். ஓசோன் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஐ.நா.வினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் ஓசோன் பாதிப்பை சரி செய்வதற்காக நாம் மரங்களை அதிக அளவு வளர்க்க வேண்டும் என்று கூறி வாகனங்களில் ஏற்படும் புகையை தடுக்க வேண்டும், குளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நாளில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கும் பூமியில் உயிர்களை காப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார். நான் ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் நான் என் சுற்றுச்சூழலையும் என் பூமியையும் பாதுகாப்பதற்கு உறுதி ஏற்கிறேன் என்று மாணவர் ராகுல் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகு செய்திருந்தார்.

The post கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : International Ozone Day ,Katimedu Government School ,Thiruthaurapoondi ,Day ,Katimedu Government High School ,Thiruthuraapoondi ,Thiruvarur District ,National Green Force and Environment Forum ,
× RELATED சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு...