×
Saravana Stores

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம்

*கொரோனாவுக்கு பிறகு மீண்டு வரும் வருவாய்

தென்காசி : கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலம் பேரூராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் ஏலம் அதிக தொகைக்கு விடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் என்பது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே முழுமையாக காணப்படுகிறது.

ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் அருவியில் தண்ணீர் விழுந்தாலும் சீசன் காலத்தில் மட்டுமே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் சமயமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களை தவற விட்டு விட்டால் இப்பகுதி மக்கள் வருவாயை மீட்டெடுக்க மீண்டும் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 2020, 2021, 2022 ஆகிய 3 ஆண்டுகளாக குற்றாலம் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சற்று மீண்டு வரத்துவங்கி உள்ளது.
குற்றாலத்திற்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் இரண்டுமே இத்தகைய ஏலத்தை விடுகின்றனர். குற்றாலநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் ரத வீதி பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விடுகின்றனர்.

குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மெயினருவி கார் பார்க்கிங், ஐந்தருவி கார் பார்க்கிங், புலி அருவி கார் பார்க்கிங் ஆகிய பகுதிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விடுகின்றனர். 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குற்றாலநாதர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகள் கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் ஏலம் விடப்படவில்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டு தான் ஏலம் விடப்பட்டது. கிட்டத்தட்ட சீசன் சுமாராக இருந்த 23ம் ஆண்டு ரூ.34 லட்சத்து 80 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ.55 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஏலக்காலம் ஜூன் 2024 முதல் மே 2025 வரை ஆகும்.அதேபோன்று குற்றாலம் பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மெயினருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றிற்கான கார் பார்க்கிங் கட்டண உரிமம் ஏலம் விடப்படுகிறது. கொரோனா காரணமாக 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகள் ஏலம் விடப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.

இதில் மெயினருவி கார் பார்க்கிங் உரிமம் ரூ.28 லட்சத்திற்கும், ஐந்தருவி கார் பார்க்கிங் வரும் உரிமம் ரூ.38 லட்சத்திற்கும், புலி அருவி கார் பார்க்கிங் உரிமம் ரூ.3.75 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டு 5 சதவீதம் கூடுதலாக அதாவது மெயினருவி கார் பார்க்கிங் ரூ.30 லட்சத்திற்கும், ஐந்தருவி கார் பார்க்கிங் ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், புலி அருவி கார் பார்க்கிங் உரிமம் ரூ.4 லட்சத்துக்கும் இறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருப்பது கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் குற்றாலம் வருவாயில் மீண்டு வருவதை காட்டுகிறது.

திடீர் தடையால் ரத்தாகும் பயணங்கள்

கொரோனாவுக்கு பிறகு குற்றாலம் சுற்றுலாவில் ஓரளவு மீண்டு வந்த போதும் அருவிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அடிக்கடி குளிக்க விதிக்கப்படும் தடையானது சற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது குற்றாலத்திற்கு வருகை தருவதை முன்கூட்டியே சுற்றுலா பயணிகள் திட்டமிட முடியாத சூழல் உள்ளது. கடைசி நேரத்தில் தடை விதிக்கப்படுவதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் தடை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கொண்டு சுற்றுப்பயணத்தை கை விட்டு வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

இந்த ஆண்டு சீசன் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளில் பெரும்பாலானவை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விதிக்கப்பட்ட தடை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு இல்லாத நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இந்த தடைகள் விதிக்கப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம், சென்சார் கருவி பொருத்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது குற்றாலம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Corona Tenkasi ,Crime Municipality and Temple Administration ,
× RELATED தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு...