- சென்னை
- ஐஸ்வர்யா ராஜேஷ்
- செல்வகரகவன்
- ஜித்தன் ரமேஷ்
- கிட்டி
- அனுமோல்
- ஐஸ்வர்யா தத்தா
- நெல்சன் வெங்கடேசன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள படம், ‘ஃபர்ஹானா’. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் மே 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:
மிகவும் கட்டுப்பாடு கொண்ட இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள் ஃபர்ஹானா. இந்த கேரக்டரில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறேன். எனது கணவராக ஜித்தன் ரமேஷ், தந்தையாக கிட்டி நடித்துள்ளனர். படத்தில் இறைவனின் விதிகளுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடக்கும் ஃபர்ஹானாவாகிய நான், குடும்ப வறுமையின் காரணமாக கால்சென்டர் வேலைக்குச் செல்கிறேன். அப்போது செல்வராகவனின் போன்கால் அடிக்கடி வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்க, கடைசியில் செல்வராகவனை என்ன செய்கிறேன் என்பது கதை. சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். நெல்சன் வெங்கடேசன் இக்கதையை சொன்னபோது, இதுவரை என் நடிப்புத்திறமையை மிஞ்சிய கேரக்டர் என்பதை அறிந்து நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இஸ்லாமியப் பெண் கேரக்டர் என்பதால், ஒவ்வொரு செயலையும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளும் எண்ணத்தில், என் வீட்டுக்கு இஸ்லாமியப் பெண் ஒருவரை வரவழைத்து, இறைவனை எப்படி தொழுவது என்பது முதல் இன்னும் பல விஷயங்களை முறைப்படி கற்றுக்கொண்டேன். அதன்படியே படத்தில் நடித்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் இஸ்லாமிய சமுதாயத்தை உயர்த்தும் படமாக இருக்கும். இதில் நடித்ததை நினைத்து மகிழ்கிறேன். 3 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதைப் பற்றி பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அதுபற்றி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. 100 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன். வித்தியாசமான கதையும், கேரக்டரும் என்றால் அங்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பார் என்று என்னை நம்பும் ரசிகர்களை எப்போதும் நான் ஏமாற்ற மாட்டேன்.
The post ஃபர்ஹானா படத்துக்காக இஸ்லாமிய நடைமுறைகளை கற்றேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.