ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே சுந்தர்ராஜபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்தவர், போலீசாரைக் கண்டு, உடனடியாக பைக்கை திருப்பி வேகமாகச் சென்றார். இதனைக் கண்ட போலீசார், அவரை பின் தொடர்ந்து சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்ததால், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீ காளிகாபுரம், வன்னியர் தெருவைச் சேர்ந்த ராஜூ (40) என்பதும், விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்களை ஆந்திராவில் இருந்து ஆர்.கே.பேட்டைக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து பைக் மற்றும் சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
The post பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல் appeared first on Dinakaran.