புழல்: சோழவரம் அடுத்த ஆத்தூர் மேம்பாலம் சாலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றிவிட்டு, மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் அடுத்த காரனோடை – ஆத்தூர், பழைய எருமை வெட்டி பாளையம், புதிய எருமை வெட்டி பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் ஆத்தூர் மேம்பாலம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த, மேம்பாலத்தில் இதுநாள் வரை மின்கம்பங்கள் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் மேம்பாலத்தின் மேலே செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். ஒருசில நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் தொல்லைகளும் நடக்கிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், மேம்பாலத்தின் 2 பக்கங்களிலும் செடிகள் வளர்ந்து புதர்போல் உள்ளன.
பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் இரவு நேரத்தில் மேம்பால சாலையில் சுற்றித்திரிவதால் ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். இதுகுறித்து, ஆத்தூர் ஊராட்சி கிராம பகுதி மக்கள் சார்பில் பலமுறை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை மேம்பாலத்தில் மின்சாரக் கம்பங்கள் அமைக்கப்படாமலும், மேம்பாலத்தில் வளர்ந்து உள்ள செடிகளை அகற்றப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து 3 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்; சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் ஆத்தூர் மேம்பாலத்தில் ஆய்வு செய்து, மின்கம்பங்களை அமைத்து, மின்விளக்குகளை எரிய வைக்கவும், வளர்ந்து உள்ள செடிகளையும் அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 3 ஊராட்சிகளின் சார்பில் பொதுமக்களை திரட்டி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஆத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.
The post சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.