திருவனந்தபுரம்: கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல மலையாள முன்னணி நடிகரான திலீப் தான் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் 8வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களில் திலீப் உள்பட 7 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதல் எதிரியான சுனில்குமாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
பலமுறை ஜாமீன் மனு அளித்தும் விசாரணை நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் இவரது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து இவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பது: பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக மிகக் கொடூரமாக தாக்குதல் நடந்துள்ளது. கேரளாவில் இது மிகவும் அபூர்வமான ஒரு சம்பவமாகும். எனவே இந்த வழக்கில் முதல் எதிரியான சுனில்குமாருக்கு ஜாமீன் வழங்குவது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானதாகும். இந்த குற்ற சம்பவத்தில் நேரடி தொடர்புள்ள 6 பேரையும் பாதிக்கப்பட்ட நடிகை அடையாளம் காட்டியுள்ளார். விசாரணை நடைபெறும்போது இவர்கள் யாரும் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை.
இவர்களது மனுக்களை திலீப்பின் வழக்கறிஞர் தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். நடிகர் திலீப் அடிப்படை ஆதாரமற்ற கதைகளை கூறி வழக்கை தொடர்ந்து தாமதப்படுத்த முயற்சிக்கிறார். முதல் எதிரி சுனில்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் நடிகையை பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட காட்சிகளை வெளியிடப் போவதாக கூறி நடிகையை அவர் மிரட்டவும் வாய்ப்பு உண்டு. எனவே சுனில்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு கேரள அரசு கூறியுள்ளது. சுனில்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும்.
The post மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு appeared first on Dinakaran.