- ஆந்திர போலீஸ்
- ஹைதெராபாத்
- ஆந்திரா
- காதம்பரி ஜேத்வானி
- மும்பை
- மகாராஷ்டிரா
- ஜக்கையாபேட்டை
- என்டிஆர்
- ஆந்திர காவல் துறை
ஐதராபாத்: ஆந்திராவில் நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் நடிகையை கைது செய்ய உத்தரவிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி மீது, ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் ஜக்கையாபேட்டையை சேர்ந்த கேவிஆர் வித்யாசாகர் என்பவர் அளித்த நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை காதம்பரி ஜேத்வானி கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்யும்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான முன்னாள் உளவுத்துறை தலைவர் பி.சீதாராம் ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா, அப்போதைய துணை போலீஸ் கமிஷனர் (விஜயவாடா) விஷால் குன்னி ஆகியோர் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தன் மீது பொய் வழக்கு பதியப்பட்டதாகவும், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தன்மீது வழக்கு பதியப்பட்டதாக காதம்பரி ஜேத்வானி மற்றும் அவரது பெற்றோர் போலீஸ் கமிஷனர் எஸ்.வி.ராஜசேகர் பாபுவை சந்தித்து புகார் அளித்தனர். அதில், தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணையின்றி தனது குடும்பத்தினரைக் கைது செய்து துன்புறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிலர் அச்சுறுத்தி வந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இப்ராஹிம்பட்டினம் போலீசார் சிலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அதையடுத்து முன்னாள் உளவுத்துறை தலைவர் பி.சீதாராம் ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா, அப்போதைய துணை போலீஸ் கமிஷனர் (விஜயவாடா) விஷால் குன்னி ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சியின் போது நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த ஆட்சியின் போது 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆந்திர காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் நடிகையை கைது செய்ய உத்தரவிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆந்திர காவல் துறையில் பரபரப்பு appeared first on Dinakaran.