×
Saravana Stores

வயநாடு நிலச்சரிவால் களையிழப்பு விழுப்புரத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள்

*அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பு

விழுப்புரம் : ஆண்டுதோறும் அறுவடை திருவிழாவான ஓணம், கேரள மாநிலத்தில் மிகுந்த கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் வசிக்கும் கேரளா மக்கள் இந்த ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள். இது மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்துகிறது. சமய நம்பிக்கையின்படி, ஒரு காலத்தில் கேரளாவை ஆண்ட புராண மன்னனின் பொற்கால ஆட்சியை கொண்டாடுகிறது.

ஓணம் பண்டிகையையொட்டி 10 நாட்களும் கேரள மக்கள் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்தனர். இதனால் தமிழகத்திலும் வசிக்கும் கேரள மக்கள் பண்டிகையை விமரிசையாக கொண்டாடாமல் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு எளிமையாக கொண்டாடினர்.

இதனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் கேரள குடும்பத்தினர் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடைகள் அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஓணம் பண்டிகையின் சிறப்பம்சமாக, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

ஓணம் பண்டிகை நடனம் உள்ளிட்ட வெளிப்படையான நிகழ்ச்சிகளை தவிர்த்தாலும் வாழை இலையில் முழுவதும் பரப்பி வைக்கப்பட்ட பல வகையான பாரம்பரிய உணவுகளான அவியல், நான்கு வகை பாயசம், புளிச்சேரி, சிப்ஸ், பச்சடி, சாம்பார், கூட்டுக்கறி, பப்படம், ஓலன், ஊறுகாய் என அறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பல வகையான உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 

The post வயநாடு நிலச்சரிவால் களையிழப்பு விழுப்புரத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Onam ,Villupuram ,Wayanad landslide ,Athappoo Kolamittu ,Onam festival ,
× RELATED வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக...