*அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால் சொந்த ஊர் திரும்பினர்
திருவண்ணாமலை : சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று சிக்கித் தவித்த தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால் மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சதாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசன்(26), அருணாச்சலம்(26). இருவரும் உறவினர்கள். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலம், இருவரும் கட்டுமானப் பணியில் ஜேசிபி ஆபரேட்டர் வேலைக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றனர்.
மாதம் ₹50 ஆயிரம் ஊதியம், தங்குமிடம், உணவு இலவசம் என தெரிவித்து வேலைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வேலைக்கு சென்ற இடத்தில் நிர்ணயித்த ஊதியத்தை தரவில்லை என கூறப்படுகிறது. அதோடு, அடிப்படை வசதி ஏதும் இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முறையான உணவு வசதியும் ஏற்பாடு செய்யவில்லை என தெரிகிறது. எனவே, வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப இருவரும் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்காமல் தனி அறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் தங்களை எப்படியாவது மீட்டு அழைத்துச் செல்லுமாறு கண்ணீருடன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த இருவரின் பெற்றோர்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தங்களுடைய மகன்களை அழைத்து வர உதவுமாறு கேட்டனர்.
அதைத்தொடர்ந்து, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார். பின்னர் அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக வாலிபர்கள் தமிழரசன் மற்றும அருணாச்சலம் ஆகியோர் சவுதி அரேபியாவில் இருந்து பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். சென்னையில் அமைச்சர் எ.வ.வேலுவை நேற்று இருவரும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், இருவரும் அவர்களுடைய சொந்த ஊரான தண்டராம்பட்டு அடுத்த சதா குப்பம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர்.
The post சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று சிக்கி தவித்த தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.