சென்னை: தமிழ் நடிகைகள் பற்றி இழிவாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார். மலையாள திரையுலகில் ஹோமா கமிட்டி அறிக்கை விவகாரம் தமிழ் திரையுலகிலும் எதிரொலித்துள்ளது.
பல நடிகைகள் தாங்கள் சந்தித்த மற்றும் கேள்விப்பட்ட பாலியல் தொந்தரவு விவகாரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பல யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 7ம் தேதி டாக்டர் காந்தராஜ் என்பவர் நடிகைகளை இழிவுப்படுத்தும் வகையில் யூடியூப் சேனலில் பேசியிருந்தார். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பாலியல் புகார் பற்றி விசாரிக்கும் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் செப்டம்பர் 7ம் தேதி யூடியூப் சேனலில் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி அவதூறாகவும், மோசமாகவும் டாக்டர் காந்தராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசிய விவகாரம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரை பலரை பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேசியுள்ளார் என்று தனது புகாரில் நடிகை ரோகினி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஆபாசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .மேலும் யூடியூப்பில் உள்ள அவரது வீடியோவை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் மருத்துவர் காந்தாராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல் ,அவமதித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் என ஐந்து பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு! appeared first on Dinakaran.