ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களின் நகரங்களை இணைக்கும் வகையில் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்டின் டாடா நகரில் இருந்து பீகார், உபி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் நகரங்களை இணைக்கும் வகையில் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று ராஞ்சியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ரூ.660 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்த திட்டங்களின் மூலம், பின்தங்கி இருக்கும் ஜார்க்கண்ட் வளர்ச்சி அடையும். பழங்குடிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித் மக்கள் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ரயில்கள் மற்றும் இதர திட்டங்களால் கிழக்கு பிராந்தியத்தில் தொழில்துறை, சுற்றுலா துறை மேம்படும்.
ஜார்க்கண்டுக்கு ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தாண்டு ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார். பின்னர் ஜாம்ஷெட்பூரில் நேற்று நடந்த பாஜ பேரணியில் மோடி பேசும்போது, ‘‘வாக்கு வங்கி அரசியலுக்காக ஜேஎம்எம் கூட்டணி அரசு வங்கதேச மற்றும் ரோகிங்கியா அகதிகளுக்கு சலுகை அளிக்கிறது. வெளிநாட்டு ஊடுருவல்காரர்களால் சந்தால் பர்கானாஸ், கோல்ஹான் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பழங்குடியினரின் மக்கள் தொகை குறைந்து வருகிறது.வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் ஜேஎம்எம்,ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் ஜார்க்கண்டின் மிக பெரிய எதிரியாகும்’’ என்றார். ராஞ்சியில் நடந்த விழாவில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை 46 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
* முதல் வந்தே மெட்ரோ இன்று தொடக்கம்
இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று அகமதாபாத்தில் தொடங்கி வைக்கிறார். அகமதாபாத்-புஜ் இடையிலான 359 கிமீ துாரத்தை இந்த ரயில் 5.45 மணி நேரத்தில் சென்றடையும்.
The post விரைவில் தேர்தல் நடக்க உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: ரூ.660 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் appeared first on Dinakaran.