×

அயல் நாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்க பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்பு: அரசு தகவல்

சென்னை: வெளிநாடுகளுக்கு சென்று முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பை படிக்க பழங்குடியின மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக பழங்குடியின நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பழங்குடியின படித்த இளைஞர்கள் உயர்கல்வி பயில்வதற்கான விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் பழங்குடியின மாணாக்கர்கள் தங்கள் கல்வியை இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் படித்து பட்டம் பெறுவதற்காக தமிழக அரசால் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்து விரிவான விழிப்புணர்வு இல்லாததாலும், குக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சென்று சேராததாலும் பயனடையும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதனை நீக்கும் விதமாக புதிய திட்டம் வகுக்கப்பட்டு அதன்படி, பழங்குடியினர் நலத்துறையின் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 312 மாணவர்கள் பயன்பெற்றனர். இதுகுறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை கூறுகையில், பழங்குடியினர் நலத் துறையின் முன்னெடுப்பில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட இதுபோன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏற்கனவே இத்துறையின் உதவித்தொகை மூலம் முனைவர் பட்டம் பெற்ற இளைஞர்கள் தங்களது அனுபவம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இதுதவிர ஜெர்மனி, தென்கொரியா, அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் லண்டன் போன்ற அயல்நாடுகளில் தற்போது உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களும் இணையவழியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதன்மூலம் ஏராளமான பழங்குடியின மாணவர்களை தேர்ந்தெடுத்து உயர்கல்வி படிக்க அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அயல் நாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்க பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்பு: அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tribal Welfare Department ,Annadurai ,Dinakaran ,
× RELATED சிவன், மயில்சாமி அண்ணாதுரை,...