புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அடுத்த 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். நேர்மையானவன் என மக்கள் தனக்கு சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாகவும் கூறி உள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐயும் கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது; ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது’ என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்தது. இதனால், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுடனான ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது. அப்போது தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: ஊழல்வாதி என்று என் மீது குற்றச்சாட்டுகளை கூறி அதை நிரூபிக்க பாஜ முயன்றது. பாஜ கட்சியால் சிறந்த பள்ளிக்கூடங்கள், மக்களுக்கு இலவச மின்சாரம் போன்றவற்றை வழங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் ஊழல்வாதிகள். நாங்கள் நேர்மையானவர்கள். நான் கைது செய்யப்பட்டபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றால், அப்போது நான் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என நினைத்தேன்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு நான் மிகுந்த மரியாதை அளிப்பவன். அதனால் ராஜினாமா அழுத்தங்களை ஏற்கவில்லை. இப்போதும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது ஒன்றிய அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. பாஜ அல்லாத கட்சியின் முதல்வர்களே, அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் தயவு செய்து ராஜினாமா செய்ய வேண்டாம். சிறையில் இருந்தபடி அரசை நடத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். பாஜவின் சதி திட்டங்களை எதிர்த்து போராட ஆம் ஆத்மியால் தான் முடியும்.
தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அக்னிபரீட்சை நடத்த விரும்புகிறேன். எனவே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி இன்னும் 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தால் தான் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன். மணிஷ் சிசோடியாவும் துணை முதல்வராக இருக்க மாட்டார். நாங்கள் இருவரும் மக்கள் தீர்ப்புக்குப் பிறகு பதவியில் அமருவோம். மதுபான கொள்கை வழக்கு நீண்ட நாள் நடக்கும்.
நான் நேர்மையானவனா, இல்லையா என்பதை டெல்லி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் மக்களிடம் செல்கிறேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். நான் நேர்மையானவன் என்று நினைத்தால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். எனக்கு பாஜ முக்கியம் இல்லை; மக்கள்தான் முக்கியம்.ஒன்றிய அரசின் சதிகளால் என்னுடைய பாறை போன்ற உறுதிப்பாட்டை தகர்க்க முடியாது. தேசத்துக்கான எனது போராட்டம் தொடரும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* மனைவியை முதல்வர் ஆக்கவே ராஜினாமா
கெஜ்ரிவால் அறிவிப்பு குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ‘‘மதுபான கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவாலை நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. ஆனால் அவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் முதல்வர் என்பதில் இருந்து சம்பிரதாய அமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளார். இதனால்தான் ராஜினாமா என்ற நாடகத்தை அவர் கையில் எடுத்துள்ளார். தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை முதல்வராக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். இதற்காகவே அவர் 2 நாள் அவகாசம் எடுத்துள்ளார்’’ என்றார்.
* முதல்வராக இருக்க எந்த தகுதியும் இல்லை
காங்கிரஸ் கட்சித் தலைவர் சந்தீப் தீக்ஷித் அளித்த பேட்டியில், ‘‘கெஜ்ரிவால் வெகு நாட்களுக்கு முன்பே முதல்வர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் நாடகம்தான். வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சிறை சென்று ஜாமீனில் வரும்போது, உச்சநீதிமன்றம், ‘எந்தவொரு கோப்புகளையும் தொடுவது அல்லது முதல்வர் இருக்கையில் அமர்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. ஹேமந்த் சோரனும்கூட சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் மீது இத்தகைய தடை எதையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. எனவே கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை’’ என்றார்.
* நவம்பரில் தேர்தல் நடத்த வேண்டும்
கெஜ்ரிவால் மேலும் பேசுகையில், ‘‘டெல்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும். ஆனால் இதை முன்கூட்டியே நடத்த வேண்டும். வரும் நவம்பரில் மகாராஷ்டிரா பேரவை தேர்தலுடன் டெல்லி பேரவைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பேன்’’ என்றார்.
The post டெல்லி முதல்வர் பதவியிலிருந்து 2 நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாக அறிவிப்பு appeared first on Dinakaran.