×
Saravana Stores

பூந்தமல்லி குட்கா கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரபல கடத்தல் மன்னன் மாங்காட்டில் கைது

குன்றத்தூர்: பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 10 டன் குட்கா போதை பொருட்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவான பிரபல குட்கா கடத்தல் மன்னனை இன்று காலை மாங்காடு அருகே போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 27ம் தேதி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரி மடக்கி சோதனை செய்தனர். அதில், பெங்களூரில் 10 டன் குட்கா போதைபொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் விக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு 10 டன் குட்கா போதைபொருள் கடத்தி வரப்பட்டதன் பின்னணியில் பிரபல குட்கா கடத்தல் மன்னன் கனகலிங்கம் முக்கிய குற்றவாளியாக இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. தலைமறைவான கனகலிங்கத்தை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு மாங்காடு அருகே பிரபல குட்கா கடத்தல் மன்னன் கனகலிங்கம் பதுங்கியிருப்பதாக மதுவிலக்கு அமலாக்கத் துறை உதவி ஆணையர் அசோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு வீட்டில் பதுங்கியிருந்த கனகலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மாங்காடு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், பிரபல குட்கா கடத்தல் மன்னன் கனகலிங்கத்தின்மீது தூத்துக்குடி, பூந்தமல்லி, மாங்காடு, கானாத்தூர் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் குட்கா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கனகலிங்கத்திடம் இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பூந்தமல்லி குட்கா கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரபல கடத்தல் மன்னன் மாங்காட்டில் கைது appeared first on Dinakaran.

Tags : Mannan ,Mangat ,GUDKA ,BANGALORE NATIONAL HIGHWAY ,BUNTHAMALLI ,Mann Mangat ,
× RELATED குட்கா கடத்திய 3பேர் கைது 40 கிலோ பறிமுதல்