×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; தொடர்ச்சியாக 5வது வெற்றி

ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் நேற்று பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா 2-1 என்ற கணக்கில் போராடி வென்றது. சீனாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட மொத்தம் 6 அணிகள் லீக் சுற்றில் பங்கேற்றன. முதல் 4 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா புள்ளிப்பட்டியலில் முதல் இடம் மற்றும் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.
பாகிஸ்தான் அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில், லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் மல்லுக்கட்டின. ஆரம்பம் முதலே இந்திய அணி வேகம் காட்டினாலும், பாகிஸ்தான் அணியே முதல் கோல் போட்டு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பதிலி ஆட்டக்காரர் நதீம் அகமது சிறப்பான ஃபீல்டு கோல் அடித்து 1-0 என முன்னிலையை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்தியாவுக்கு, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 13வது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். அடுத்து 19வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பிலும் ஹர்மன் கோல் அடித்து அசத்த, இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமை ஆட்டத்தின் முதல் பாதி முடிவிலும் நீடித்தது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக சீனா (3-0), ஜப்பான் (5-1), மலேசியா (8-1), கொரியா (3-1) அணிகளை இந்தியா வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றின் முடிவில் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்ததுடன், தோல்வியை சந்திக்காத ஒரே அணியாகவும் முத்திரை பதித்தது. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; தொடர்ச்சியாக 5வது வெற்றி appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey ,India ,Pakistan ,Hulunbier ,China.… ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு