×
Saravana Stores

காங்கிரஸ் புகாரால் பரபரப்பு ராகுலை விமர்சித்தாரா நொய்டா கலெக்டர்?

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சனம் செய்த உபி ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று முன்தினம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில்,’வரலாற்றை மாற்ற முடியாது. வரலாறு உருவாக்கப்படுகிறது. வரலாறு அவரை எப்படி நினைவில் வைத்திருக்கும் என்பது மோடிக்கு தெரியும். அதனால் அவர் கவலைப்படுகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரபிரதேசமாநிலம் நொய்டா மாவட்ட கலெக்டர் மனிஷ் வர்மாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து இந்தியில் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,’ நீங்களும், உங்கள் கட்சியும் பப்புவை பற்றி சிந்தியுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பற்றி சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், ‘இது நொய்டா கலெக்டரின் வார்த்தைகள். ஒரு மாவட்டத்துக்கு பொறுப்பான அதிகாரி. அவருடைய வார்த்தை மொழி மற்றும் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரைப்பற்றிய அவரது சிந்தனைகளை பார்க்க வேண்டும். இதில் இருந்து நாட்டின் அனைத்து நிர்வாக பதவிகளில் சங்கிகள் இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது’ என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,’விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறும் வகையில் கருத்து பதிவிட்ட நொய்டா கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதனிடையே நொய்டா கலெக்டர் கூறுகையில், ‘சமூக விரோதிகள் தன்னுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி இந்த அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி புகாரின் நகலையும் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

The post காங்கிரஸ் புகாரால் பரபரப்பு ராகுலை விமர்சித்தாரா நொய்டா கலெக்டர்? appeared first on Dinakaran.

Tags : Noida Collector ,Rahul ,Congress ,New Delhi ,UP IAS ,Lok ,Sabha ,Rahul Gandhi ,Supriya Shrinade ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல்...