×

கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம்

கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார, கொலை தொடர்பான விவகாரத்தில் பயிற்சி மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நீதி கேட்டும், ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் சில உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் மாநில சுகாதார அமைச்சகமான ஸ்வஸ்த்யா பவனில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த முதல்வர் மம்தா கடந்த 12ம் தேதி தலைமை செயலகத்தில் 2 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தையை நேரடி ஔிபரப்பு செய்ய வேண்டும் என்று பயிற்சி மருத்துவர்கள் பிடிவாதம் பிடித்ததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்வஸ்த்யா பவனுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அப்போது உரையாற்றி மம்தா பானர்ஜி, “நான் உங்களை சந்திக்க முதல்வராக வரவில்லை. உங்கள் மூத்த சகோதரியாக வந்துள்ளேன். கொட்டும் மழையில் நேற்று இரவு நீங்கள் போராடியதை எண்ணி எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை.

உங்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து, கடும் நடவடிக்கை எடுப்பேன். அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து முதல்வர் மம்தாவை சந்திக்க பயிற்சி மருத்துவர்கள் சார்பில் நேரம் கேட்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை 6.45 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்துக்கு பயிற்சி மருத்துவர்கள் சென்றனர். அப்போதும் முதல்வருடனான பேச்சுவார்த்தை முழுவதையும் நேரடி ஔிபரப்பு செய்ய வேண்டும், மம்தாவுடனான சந்திப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மருத்துவர்களின் இந்த கோரிக்கையை முதல்வர் மம்தா நேற்று மீண்டும் நிராகரித்து விட்டார்.

அவர் பயிற்சி மருத்துவர்களிடம் கூறுகையில்,’ உங்கள் அனைவரையும் உள்ளே வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நேரடி ஒளிபரப்பை அனுமதிக்க முடியாது. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். ஏன் என்னை இப்படி அவமானப்படுத்துகிறீர்கள்? தயவு செய்து என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள். இதற்கு முன் மூன்று முறை நான் காத்திருந்தேன் ஆனால் நீங்கள் வரவில்லை’ என்று பேசினார். ஆனாலும் பயிற்சி மருத்துவர்கள் பிடிவாதம் நீடிப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

* பலாத்கார வழக்கில் சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஏற்கனவே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பயிற்சி டாக்டர் பலாத்கார வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் போலீஸ் அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ நேற்று கைது செய்தது.

The post கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம் appeared first on Dinakaran.

Tags : Mamata ,Adamant ,Chief Minister ,KOLKATA ,Mamata Banerjee ,RG Garh Government Hospital ,Medical College ,Kolkata, West Bengal ,Dr. ,Baladkara ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி