புதுச்சேரி, செப். 14: புதுச்சேரி சுகாதாரத்துறை இணையதளத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவி தர்ஷினி அகில இந்திய அளவில் 24வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். நாடு முழுவதும் அரசு, சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்.டி., எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் பிஜி நீட் தேர்வில் தகுதி பெறுவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான பிஜி நீட் தேர்வு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மூலம் நடத்தப்பட்டது. புதுச்சேரியில் 1,464 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகள் www.natboard.edu.in என்ற இணையதளத்தில் ஆக.22ம் தேதி வெளியானது.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் சென்டாக்கில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வருகிற 21ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாணவ, மாணவிகளின் நீட் தேர்வு தரவரிசை பட்டியல் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 1,464 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் மாணவி தர்ஷினி (99.99 சதவீத மதிப்பெண்) அகில இந்திய அளவில் 24வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். மாணவர் முகுந்தன் (99.01 சதவீத மதிப்பெண்) அகில இந்திய அளவில் 196வது இடமும், மாநில அளவில் 2வது இடமும், மாணவர் வைஷ்னவ் மதுசூதனன் (99.90 சதவீத மதிப்பெண்) அகில இந்திய அளவில் 215வது இடமும், மாநில அளவில் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 5 நாட்களுக்குள் சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் நோடல் அதிகாரிக்கு (மருத்துவ கல்வி) dms.pon@nic.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். இத்தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரி மாணவர்களின் நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.