×

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்

திருவாரூர், நவ.8: திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என டி.எஸ்.பிக்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக டி.எஸ்.பிக்களுடனான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி அருள்செல்வம், டி.எஸ்.பிகள் மணிகண்டன் (திருவாரூர்), தமிழ்மாறன் (நன்னிலம்), ராஜா (முத்துப்பேட்டை), அஸ்வத்ஆண்டோஆரோக்கியராஜ் (மன்னார்குடி), பாஸ்கரன் (திருத்துறைப்பூண்டி) மற்றும் மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பிக்கள் பழனிசாமி, சுகுமாறன், மாவட்ட குற்றபதிவேடு கூட டி.எஸ்.பி பிலிப்பிராங்ளின்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் பேசுகையில், மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் குற்ற வழக்குகளை குறிப்பாக ரவுடிகள் மீது இருந்து வரும் குற்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும், கைது செய்யப்பட வேண்டிய நபர்கள், பிடி கட்டளை நிறைவேற்றப்பட வேண்டியவை, வாகன தணிக்கை, வாகன விபத்துகளை குறைத்தல், இரவு ரோந்து பணி போன்றவற்றினை சம்மந்தப்பட்ட டி.எஸ்பிகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தில் கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி தெரிவித்தார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,SP ,Jayakumar ,DSBs ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து...