×

ஓணம் பண்டிகை எதிரொலி சென்னை-கேரள மாநிலம் செல்லும் விமானங்கள் ஹவுஸ்புல்: டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில் பயணிகளுக்கான இடங்கள் முழுமையாக நிரம்பின. மேலும் டிக்கெட் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பண்டிகைக்காக கேரள மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் இடங்கள் முழுவதுமாக நிரம்பி விட்டன. அத்துடன் கேரளாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களின் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்து காணப்பட்டன.

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் வழக்கமான விமான கட்டணம் ரூ.3404. ஆனால் நேற்றைய கட்டணம் ரூ.11,928 முதல் ரூ.13,855 வரையும், சென்னையில் இருந்து கொச்சி செல்வதற்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,275, ஆனால் நேற்றைய கட்டணம் ரூ.6,567 முதல் ரூ.8,842 வரையும் அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், சென்னை -கோழிக்கோடு இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,851. ஆனால் நேற்றைய கட்டணம் ரூ.10,913 முதல் ரூ.21,740 வரையும் அதிகமாக இருந்தன. விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து இருந்தாலும், சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கேரள மக்கள் அதிக கட்டணம் செலுத்தி விமானப் பயணம் மேற்கொண்டனர்.

The post ஓணம் பண்டிகை எதிரொலி சென்னை-கேரள மாநிலம் செல்லும் விமானங்கள் ஹவுஸ்புல்: டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerala ,Onam festival ,Onam ,
× RELATED ஆன்லைன் முதலீட்டு மோசடியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளி கைது