புதுடெல்லி: செபி தலைவர் மாதபியும் அவரது கணவரும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைந்தனர் என்ற காங்கிரசின் குற்றச்சாட்டை மாதபி புச் மற்றும் அவரது கணவர் மறுத்துள்ளனர். அதானி நிறுவனம் முறைகேட்டிற்கு பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச், அவரது கணவர் தவால் புச் ஆகியோருக்கு பங்குகள் இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. அவற்றை மாதபியும் அவரது கணவரும் மறுத்தனர்.
சமீபத்தில் மாதபி புச் மீது காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தது., மாதபி புச் விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அதாவது 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளார் என தெரிவித்தது. மேலும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா,ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ்,பிடிலைட் நிறுவனங்களிடம் இருந்து புச்சின் நிறுவனமான அகோரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.2.95 கோடியை பெற்றுள்ளது.
மாதபியின் கணவர் தவால் மஹிந்திரா நிறுவனத்திடம் ரூ.4.79 கோடி சம்பாதித்ததாக சமீபத்தில் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பல வாரங்களாக வெளி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மாதபி மவுனம் காத்து வருகிறார் என ஹிண்டன்பர்க் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுகள் முறையற்றது, முரண்பாடானதாகும்.
நாங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மோசடியாக பெற்றதன் மூலம் தனியுரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு வருமான வரி சட்டத்தையும் மீறியுள்ளனர். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் ஒரே நேரத்தில் தெரிவிக்காமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது, அவதூறானது. தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என குறிப்பிட்டுள்ளனர்.
The post காங்கிரசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் செபி தலைவர் மாதபி மறுப்பு appeared first on Dinakaran.