×
Saravana Stores

இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் ராகுலுக்கு எதிராக பொதுநல மனு

புதுடெல்லி: ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட கோரியும், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.விக்னேஷ் என்பவர் ராகுல் காந்தியின் குடியுரிமைக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இந்திய குடியுரிமை இல்லாத ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதற்கான ஆதாரங்கள் இங்கிலாந்து அரசிடம் உள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி உரிய நீதிமன்ற உத்தரவுடன் இங்கிலாந்து அரசிடம் இருந்து ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற வேண்டும். மேலும் ராகுல் காந்தி ரேபரேலி மக்களவை உறுப்பினர் என வழங்கப்பட்ட தேர்தல் ஆணைய சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்த இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உத்தரபிரதேச தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர் விக்னேஷ் கடந்த ஜூலை மாதம், ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் ராகுலுக்கு எதிராக பொதுநல மனு appeared first on Dinakaran.

Tags : Rahul ,UK ,New Delhi ,Allahabad High Court ,CBI ,Rahul Gandhi ,Lok Sabha ,Karnataka State Bharatiya Janata Party ,Dinakaran ,
× RELATED இந்திய பொருளாதார கட்டமைப்பை...