×
Saravana Stores

மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 2 ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கும்பல் வெறிச்செயல்; இருவர் சிக்கினர்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகள் இருவர் 7 பேர் கும்பலால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த இரண்டு பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் மோவ் கன்டோன்மன்ட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது இரு தோழிகளுடன் கடந்த செவ்வாய்கிழமை வெளியே சென்றனர். அவர்கள் மோவ் – மண்டலேஸ்வர் பகுதியில் சுற்றுலா தலம் ஒன்றுக்குச் சென்றனர். அப்போது இருவர் மலை உச்சிக்கு செல்ல, இருவர் காரிலேயே இருந்தனர்.

புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அடையாளம் தெரியாத 7 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மோவ் – மண்டலேஸ்வர் சுற்றுலா தலத்தின் சாலை அருகே வந்து காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது பெண் தோழியை சராமாரியாக தாக்கத் தொடங்கியது. ஜாம்கேட் பகுதியில் அமைந்த அந்த இடம் மலைப்பாங்கான இடம் மட்டுமல்லாமல், காடுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு மலை உச்சிக்குச் சென்றிருந்த மற்றொரு ராணுவ அதிகாரியும் தோழியும் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தனர்.

அப்போது காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது தோழியைத் தாக்கிய கும்பல் அவர்களைத் துப்பாக்கி முனையில் பிணையக்கைதிகளாக வைத்துக் கொண்டு, மலையில் இருந்து இறங்கிவந்த அதிகாரியிடம் ரூ.10 லட்சம் கொண்டு வருமாறு மிரட்டியுள்ளது. அவர்கள் கையில் இருந்த பணம், நகையை கொடுத்துவிட்டு, மேலும் பணம் எடுத்துவருவதாக கூறிச்சென்றனர். அந்த இடைவெளியில் ராணுவ அதிகாரியின் தோழியை தனியே அழைத்துச்சென்று கும்பல் பலாத்காரம் செய்தது. அதற்குள் தப்பிய அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர். அந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலுக்கு உள்ளான அந்த ராணுவ அதிகாரியும், அவரது தோழியும் மோவ் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துத் செல்லப்பட்டனர்.

அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ராணுவ அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 70 (கூட்டுப்பாலியல் வன்கொடுமை), 310- 2 (மோசடி), 308-2 (மிரட்டி பணம் பறித்தல்), 115-2 (காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தூர் எஸ்பி ஹிதிகா வசால் கூறுகையில்,’ ராணுவ வீரர்களை தாக்கி, அவரது தோழியை பலாத்காரம் செய்த வழக்கில் இதுவரை 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது 2016ம் ஆண்டில் ஒரு கொள்ளை வழக்கு பதிவாகியுள்ளது. அந்தக் குழுவில் ஒருவரிடம் துப்பாக்கியும் இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள்’ என்றார்.

* பா.ஜ ஆளும் மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு இல்லை
மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ பாஜ ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு இல்லை. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பற்றி பாஜ அரசின் எதிர்மறையான அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது. குற்றவாளிகளின் இந்த அடாவடித்தனம், நிர்வாகத்தின் மொத்த தோல்வியின் விளைவாகும், இன்னும் எவ்வளவு காலம் கண்களை மூடிக்கொள்வார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

The post மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 2 ராணுவ அதிகாரிகளை தாக்கி தோழி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கும்பல் வெறிச்செயல்; இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : incident ,Madhya Pradesh ,Indore ,Mow Cantonment ,
× RELATED குஜராத் சிறுவன் கடத்திக்கொலை: சிஆர்பிஎப் வீரர் கைது