சேலம்:சேலம் கருப்பூரில் 18 ஏக்கர் பரப்பளவில் ₹20கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் அண்ணா பூங்கா அருகில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இங்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தய தளம், கூடைப்பந்து, போல்வால்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கமும் உள்ளது. இங்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வீரர்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இது தவிர்த்து விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் இங்கு வந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் காந்தி ஸ்ேடடியத்திற்கு மாற்றாக பெரிய அளவிலான இடவசதியுடன் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். மேலும், உள்விளையாட்டு அரங்கத்தினை தரம் உயர்த்தப்பட வேண்டும் என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ₹20 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் என என அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம், இரும்பாலை, ஏற்காடு அடிவாரம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் காணொலி வாயிலாக ₹20 கோடி மதிப்பில் அமைய உள்ள சேலம் கருப்பூர் பல்ேநாக்கு விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது: சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 18.06ஏக்கர் பரப்பளவில் ₹20கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நிர்வாக கட்டிடம், உள்விளையாட்டு அரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் விளையாட்டினை பார்வையிடும் வகையில் கேலரி அமைக்கப்படுகிறது.
400மீ ஓட்டப்பந்தயத்திற்கு தேவையான ஓடுதளம், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கோ-கோ, டென்னிஸ், ஸ்கேட்டிங், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம், ஹாக்கி, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. அதேபோல், வாலிபால் மற்றும் பேட்மிட்டன் போட்டிக்கு தனியாக இன்டோர் கோர்ட் மற்றும் விளையாட்டு விடுதியும் அமைய உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்காக கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். அதேபோல், மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். இதனைக்கருத்தில் ெகாண்டு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post சேலம் கருப்பூரில் 18 ஏக்கர் பரப்பளவில் ₹20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம்: பல்வேறு வசதிகளுடன் உருவாகிறது appeared first on Dinakaran.