×
Saravana Stores

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் வேலி அமைக்கும் பணி துவங்கியது

வடலூர், செப். 12: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்திய ஞான சபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ரூ. 99.90 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும், வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 106 ஏக்கரில் 71.20 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழ்வேங்கை, கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பாஜ மாநில நிர்வாகி வினோத் ராகவேந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தெய்வநிலையத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அரசின் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்று சர்வதேச மையம் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

மேலும் இரண்டு கட்டமாக வள்ளலார் சத்திய ஞானசபை அருகில் அமைந்துள்ள 10 ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி, பூட்டி சீல் வைத்து ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு வீடு, கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வடலூர் வள்ளலாருக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலங்களை தவிர்த்து திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான மீதமுள்ள நிலங்களை கண்டறியவும், அந்நிலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அகற்றிட நிலஅளவையர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்திடவும், அதில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினரை ஈடுபடுத்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இப்பணியை ஒருங்கிணைத்து ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிவு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு செப்டம்பர் 12ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் 34 ஏக்கர் நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளது என்ற விவரத்தையும் அளிக்க உத்தரவிட்டது. மேலும் சிறுவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி பெருவெளிக்குள் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அந்த பள்ளங்களை சுற்றி உடனடியாக வேலி அமைக்க நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து அந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கட்டிடங்களில் ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ள நிலையில் இந்த கட்டிடங்கள் எப்போது வாங்கப்பட்டது, தற்போது யார் பெயரில் உள்ளது என அந்த கட்டிடங்களில் உள்ளவர்களிடம் கேள்வி எழுப்பி கணக்கெடுப்பு நடத்தினர். மேலும் இந்த 34 ஏக்கருக்கும் வில்லங்கச் சான்றை வருவாய்த்துறையினர் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிறுவர்கள், குழந்தைகள் நலன் கருதி சத்திய ஞான சபையின் பெருவெளியில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி தகரத்தாலான ஷீட்டால் வேலி அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இப்பணி முடியும் என தெரிகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் இன்று விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

The post உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் வேலி அமைக்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : High Court ,Vadalur Vallalar ,Sathya Gnanasabha ,Vadalore ,Vadalur Sathya ,Gnana Sabha ,Tamil Nadu ,Vallalar International Center ,Vadalur ,Vallalar Satya Gnana Sabha ,Cuddalore district ,Satya Gnaasabha ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை...