செங்கல்பட்டு, செப்.12: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பயனாளிகள் மானியக்கடன் பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய வட்டாரங்களில் உள்ள 119 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு கடன் வசதிகளை ஊக்குவிக்கவும் இணை மானியத் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 30 சதவீத மானியக்கடன் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த 55 வயதிற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினைச் சார்ந்த பெண்கள் அல்லது அவர்களது குடும்பத்தினைச் சார்ந்த தொழில் முனைவோர் வருகின்ற 14.9.2024 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்ட அலுவலக தரை தளம், இ பிளாக், அறை எண்.5ல் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
தொழில் கடனில் அளவு 15 லட்சத்திற்கு மேல் இருந்தால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த எந்த பெண் தொழில் முனைவோரும் விண்ணப்பிக்கலாம். மேலும், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர் தங்கள் தொழில் மேம்பாடு குறித்த ஆலோசனைகள் பெற மதி சிறகுகள் தொழில் மையத்தினை அணுகலாம். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர், திருக்கழுக்குன்றம் வட்டார அணி தலைவரை 80120 86823, திருப்போரூர் வட்டார அணி தலைவரை 99525 88608, புனித தோமையார் மலை வட்டார அணி தலைவரை 81221 91516, மதி சிறகுகள் தொழில் மைய தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலரை 95006 78592 மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலரை 97899 42877 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post தொழில் முனைவோர் மானிய கடன் பெற வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.