நன்றி குங்குமம் தோழி
அர்மேனியாவில் நடந்த உலக அளவிலான செஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த ரேய்ச்சல் அபி. வெற்றியை தொடர்ந்து அடுத்த போட்டிகளுக்கு பயிற்சி எடுத்து வரும் ரேய்ச்சல் அபியிடம் இது குறித்து பேசிய போது…‘‘சொந்த ஊரு சென்னைதான். நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் மற்ற குழந்தைகள் போல் வெளியே போய் விளையாட முடியாது என்பதால், சின்ன வயசில் அம்மா எனக்கு சதுரங்கம் விளையாட சொல்லிக் கொடுத்தாங்க. நானும் அடிப்படை முறையில் இந்த விளையாட்டை விளையாட கத்துக்கிட்டேன். நாளடைவில் எனக்கு அதன் மேல் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது.
அதனால் நானும் அம்மாவுடன் மட்டுமில்லை அப்பாவுடனும் தினமும் செஸ் விளையாடுவேன். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டு மேல் ஏற்பட்ட அதீத ஆர்வத்தினால், வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரிடமும் செஸ் விளையாட தெரியுமான்னு கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் தெரியும் என்று ெசான்னால் அவர்களுடனும் விளையாடுவேன்.
என்னுடைய ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர் எனக்கு செஸ் விளையாட்டினை முறையாக சொல்லித்தர விரும்பினார்கள். அதற்காக பயிற்சியாளரிடம் சேர்ந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அவர் எனக்கு அந்த விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் சொல்லித் தந்தார். நானும் ஆர்வமாக அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
நான் நன்றாக விளையாடியதால் 2017ம் ஆண்டு முதல் முதலாக செஸ் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றேன். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. தோல்வியை கண்டு துவண்டு விடாமல், தீவிரமாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். தினமும் நான்கு மணி நேரம் வரை செஸ் விளையாடுவேன். இந்த உழைப்பு வீண் போகவில்லை.அதற்கடுத்த போட்டிகளில் நான் வெற்றி பெற தொடங்கினேன். இந்த விளையாட்டு எனக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்தது. அதனால் அந்த உலகத்திற்குள் இருக்கவே விரும்பினேன்’’ என்றவர் செஸ் விளையாட்டின் சூட்சுமத்தை பற்றி கூறினார்.
‘‘இந்த விளையாட்டைப் பொறுத்தவரை முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் நம் ஆட்டத்தை எப்படி மாற்றும் என்பதை நாம் முன்கூட்டியே கணித்து வைத்திருக்க வேண்டும். விளையாடும் போது கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது. எதிராளி நகர்த்தும் ஒரு காயினால், நாம் அடுத்து எப்படி நம்முடைய காய்களை நகர்த்த வேண்டும் என்றும் அதே சமயம் அவர் அடுத்து என்ன செய்வார் என்பதை முன்கூட்டியே சிந்திக்க தெரிந்திருக்கணும்.
அதனால் ஒவ்வொரு விளையாட்டு விளையாடும் போதும் ஆழமாகவும் கவனத்தோடும் இருந்தேன். தொடர்ந்து செஸ்சில் வெற்றி பெற்றதால், அர்மேனியாவில் நடைபெற்ற உலக அளவிலான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மொத்தம் 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பாக நான் கலந்து கொண்டேன். இதில் நான் 3வது இடம் பிடித்து வெண்கலப் பரிசை வென்றேன். இதன் மூலம் நான் உலக அளவில் மூன்றாவது செஸ் சாம்பியன் என்ற பெருமையை பெற்றேன். என்னுடைய பல நாள் கடினமான உழைப்பிற்கு அங்கீகாரமாகத்தான் நான் இதை பார்க்கிறேன். இதற்கு முக்கிய காரணமே என் பெற்றோர்தான். அவர்கள் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் இந்த அளவிற்கு வர முடிந்தது’’ என சந்தோஷமாக சொல்லும் ரேய்ச்சல் படிப்பிலும் கெட்டியாம்.
‘‘இவருடைய வெற்றி இவரை போல் உள்ள பல குழந்தைகளுக்கு தங்களாலும் உலகளவில் ஜொலிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார் அவரது அன்னை எலிசபெத் மம்மேன் அபி. இந்த வெற்றி குறித்து அவர், ‘‘ரேய்ச்சல் நன்றாக படிப்பாள். அதே சமயம் அவளுக்கு நான் ஏதாவது ஒரு விளையாட்டையும் சொல்லிக் கொடுக்க விரும்பினேன். வீட்டிலிருக்கும் போது நானும் அவளும் செஸ் விளையாடிக் கொண்டிருப்போம்.
அப்படித்தான் அவள் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு இந்த விளையாட்டு ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் நானும் தினமும் அவளுடன் சேர்ந்து விளையாட தொடங்கினேன். அவளும் அதில் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அவளின் ஆர்வம் புரிந்து ஒரு பயிற்சியாளரை நியமித்து தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொடுத்தோம். அவளுடைய விளையாட்டுத் திறன் மேம்பட்டது. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை சந்தித்தாள். இப்போது உலக அளவில் நடந்த செஸ் போட்டியில் அவள் மூன்றாம் இடம் பிடித்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அந்த வெற்றியை கொண்டாடி கொண்டு வருகிறோம்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் எலிசபெத் மம்மேன் அபி.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post உலக அளவில் செஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சிறுமி! appeared first on Dinakaran.