×

ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: ஆளுநர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!!

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னரும் தகுந்த காரணங்கள் இல்லாமல் ஆளுநர் நிராகரித்தற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

தங்கள் மீது கொடுங்குற்றங்கள் இல்லாத காரணத்தால் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய இதற்கென அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. முதலமைச்சரும் அதற்கான அனுமதியை வழங்கினார். ஆனால், ஆளுநர் அதற்கு சரியான காரணம் தெரிவிக்காமல் முன்கூட்டியே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டதாக மனுவில் சுட்டிக்காட்டினார். எனவே தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் நன்னடத்தை அடிப்படையில் 14 ஆண்டுகள் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு கொள்கையின்படி தண்டனை காலம் 10 ஆண்டுகள் பூர்த்தியானாலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பரிசீலிக்காமல் ஆளுநர் இதனை நிராகரித்து அடிப்படையில் அரசும் நிராகரித்து உத்தரவிட்டதாக வாதாடினார்.

பதிலுக்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி முன்கூட்டியே விடுதலை செய்ய 10 ஆண்டுகள் பூர்த்தியானால் போதுமானது என்றும், மீண்டும் கோப்புகளை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடலாம் என கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னரே தக்க காரணங்கள் கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் அரசு இந்த கோப்புகளை 8 வாரத்திற்குள் மீண்டும் மறுபரீசீலிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

The post ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: ஆளுநர் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Chief Minister ,Shankar ,Balayankota Jail ,Velumani ,Coimbatore Jail ,
× RELATED மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக...