×

ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரல்

 

ஆவடி, செப். 11: ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த அயப்பாக்கம் இசிஐ சர்ச் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் – உஷா தம்பதியின் மகள் ரக்சிதா (14) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நண்பர்கள் வீடுகளில் கொடுப்பதற்காக பலகாரங்களை எடுத்துக்கொண்டு ரக்சிதா வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள வீட்டில் வளர்த்து வரும் லாப்ரடர் வகை நாய் திடீரென சிறுமி ரக்சிதா மீது பாய்ந்துள்ளது. பின்னர் சிறுமியின் கையை பயங்கரமாக கடித்து குதறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கதறியபடி நின்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

இதில் சிறுமி ரக்சிதாவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அப்பகுதியில் அந்த வளர்ப்பு நாயை முறையாக கட்டிப் போடுவதில்லை என்றும், நாய் சாலையில் சுற்றித் திரிவதால் அந்த பகுதியில் நடந்து செல்ல அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க, நாய் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரல் appeared first on Dinakaran.

Tags : Ayappakkam ,Avadi ,Srinivasan - Usha ,ECI Church ,Ayyappakkam ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் – ஆவடி இடையே பழுதான நெடுஞ்சாலை சீரமைப்பு