×

உச்ச நீதிமன்ற கெடு முடிந்தும் கொல்கத்தாவில் பணிக்கு திரும்பாத ஜூனியர் டாக்டர்கள்: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கொல்கத்தா: உச்ச நீதிமன்றத்தின் கெடு நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தும், ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தை தொடர்கின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியின் போது, முதுகலை 2ம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில ஜூனியர் டாக்டர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி பணிக்கு திரும்பிய நிலையில் ஜூனியர் டாக்டர்கள் மட்டும் போராட்டத்தில் தீவிரமாக உள்ளனர். இதற்கிடையே, ஜூனியர் டாக்டர்கள் நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் கூறுகையில், ‘‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும். கொல்கத்தா போலீஸ் கமிஷனர், சுகாதார செயலாளர், சுகாதார சேவை இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரை பொறுப்பிலிருந்து மாநில அரசு நீக்க வேண்டும். இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்’’ என்றனர்.

* மம்தா அழைப்பு: டாக்டர்கள் அதிருப்தி
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்களை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஆனால் 10 பேர் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றதாலும், யாரை நீக்க வேண்டுமென போராட்டம் நடக்கிறதோ (சுகாதார செயலாளர்) அவர் மூலமாக பேச்சுவார்த்தைக்கான இமெயில் அனுப்பி மம்தா அரசு அவமதித்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

The post உச்ச நீதிமன்ற கெடு முடிந்தும் கொல்கத்தாவில் பணிக்கு திரும்பாத ஜூனியர் டாக்டர்கள்: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Supreme Court ,RG Garh Government Hospital ,Kolkata, West Bengal ,
× RELATED பெண் மருத்துவர் கொலை விவகாரம்; மேற்கு...