×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வில் அதிரடி மக்கள் பணிகளில் தொய்வு 4 அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வின்போது மக்கள் நலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது தெரியவந்ததால் 4 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைரீதியான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த 120 அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர், மக்கள் நலத்திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். முன்னதாக பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அமைச்சரின் நேரடி ஆய்வு மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தின் அடிப்படையில், மக்கள் நலத்திட்டப் பணிகளில் ஏற்பட்ட தொய்விற்கு காரணமான 4 அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றிய ஒரு சமையலர் ஆகியோர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 விடுதி காப்பாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை தெற்கு வட்டாட்சியர் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், இங்கிருந்த பூ.விஜயலட்சுமி மதுரை தெற்கு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சொ.கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், இங்கிருந்த சி.செல்லப்பாண்டியன் செல்லம்பட்டி ஒன்றியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வில் அதிரடி மக்கள் பணிகளில் தொய்வு 4 அதிகாரிகள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Madurai ,Udayanidhi Stalin ,Madurai Collector ,
× RELATED இந்திய விமானப்படை சாகசம் ‘மறக்க...