சமஸ்திபூர்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் உள்ளூர் சந்தைகளில் ஆடு, கோழி போன்ற இறைச்சியுடன் நத்தை கறி விற்பனையும் அமோகமாக நடக்கிறது. பீகாரில் மழைக்காலம் தொடங்கும் நிலையில், உள்ளூர் சந்தைகளில் நத்தை விற்பனை தொடங்கியுள்ளதால் மக்கள் அதிகளவில் நத்தை கறியை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து சமஸ்திபூர் நத்தை வியாபாரிகள் கூறுகையில், ‘டோகா என்பது நத்தையின் மற்றொரு பெயராகும். ஆட்டிறைச்சியை விட இதன் சுவை மிகவும் ருசியாக இருக்கும். அதனால் மக்கள் இதை மிகவும் விரும்பி வாங்கிச் செல்வார்கள். நத்தை கடல் சார்ந்த உணவு வகை என்பதால், அதனை சுத்தம் செய்து கொடுத்தால் மக்கள் வாங்கிச் செல்வார்கள்.
சமீபத்தில் பீகாரில் பெய்த மழையால் ஆறுகள் மற்றும் சிறிய மற்றும் பெரிய நீர்த்தேக்க பகுதிகளில் அதிகளவு நத்தை கிடைக்கிறது. அவற்றை சேகரித்து சந்தைக்கு கொண்டு வருகிறோம். கண்பார்வை குறைபாடுகளை நத்தை உணவு சரிசெய்யும். ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை நத்தை விற்கப்படுகிறது. நத்தையில் மேல் ஓடுகளை அகற்றிவிட்டு, அதனுள் இருக்கும் இறைச்சி போன்ற ஊண் பகுதியை எடுத்து சூடான நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆட்டிறைச்சியை சமைப்பது போல் தயார் செய்து சாப்பிட வேண்டும்’ என்றார்.
நத்தை உணவு குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘நத்தையில் பொட்டாசியம் அளவு அதிகமாக உள்ளது; அதனை சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை பராமரிக்க முடியும். கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதயம் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பை குறைக்க முடியும். இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நத்தை கறி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
The post கிலோ ரூ250 வரை விற்பனை; ஆட்டுக்கறியை விட நத்தை கறி டேஸ்டாம்… பீகார் சந்தைகளில் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.