×
Saravana Stores

பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

சென்னை: பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பிற மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும். தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 2022 2023ஆம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 51 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24ம் நிதியாண்டில் 173 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.215.76 கோடி செலவில் 844 கூடுதல் வகுப்பறைகள் 21 அறிவியல் ஆய்வகங்கள் 184 கழிப்பறைகள் மற்றும் 700 மீட்டர் சுற்றுசுவர் ஏற்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டிற்கு 23 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.58.61 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. 2024-2025ம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.745.27 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான கருத்துரு நபார்டு வங்கியின் ஒப்புலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 2022 முதல் 2024 வரை ஒப்பளிக்கப்பட்ட 614 பள்ளிகளுக்கு ரூ.1,086 கோடி செலவில் உட்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திறன்மிகு வகுப்பறைகள்:
மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கு திறன்மிகு வகுப்பறைகள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் ஆடியோ மற்றும் வீடியோவைப் பார்க்கவும் கேட்கவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கும்போது பாடப் பொருட்கள் மற்றும் பாடநூல் தொடர்பான கூறுகளை விரைவாகப் புரிந்துகொள்வார்கள். இது எதிர்காலக் குறிப்புக்காக, அத்துடன் உரைகள். புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவல்களை பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும் பெற்ற தகவல்களை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. 2021-22ம் ஆண்டில் 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.20.76 கோடியும்,

2022-23ஆம் ஆண்டில் 12,500 தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.230 கோடியும், 2023-24ம் ஆண்டில் 7500 தொடக்கப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,865 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2024-25ம் ஆண்டில், 6,179 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைத்திட ரூ.117.401 கோடி மற்றும் ரூ. 1,750 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25 வரை 28,794 பள்ளிகளில் 551.411 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி மதுரைத் திருநகரில் தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் கடந்த 2023ம் ஆண்டு ஆக.25ம் தேதி முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் , கடந்த ஜூலை 15ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.

நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, ஏறத்தாழ 10 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மூலம் 11ம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்:
கிராமப்புற மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியாக 3,44,144 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்
அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பயன் பெறுகின்றனர்.

ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரின் பாராட்டு
டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும்மேலும் உயர்த்தியுள்ளன. அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 80 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்திரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Union Minister ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Minister of Higher Education ,Union Government ,Tamil Nadu Government ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா...