ஊட்டி : ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில், 70க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாதாவின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, ஆரோக்கிய அன்னை ஆலயம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்பின், நவநாள், தேர் பவனி உள்ளிட்டவைகள் வெகு விமர்சையாக நடைபெறும். இறுதி நாளான 8ம் தேதி ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 70க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மாதாவின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக குழந்தைகள் ஒவ்வொரு விதமான மாதா வேடமணிந்து ஊர்வலமாக வந்து திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்த பின்னர் அன்னையின் திருத்தேர் பவனி நடைபெற்றது.
நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற பவனி மீண்டும் திருஇருதய ஆண்டவர் பேராலயம் வந்தடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இந்த ஆரோக்கிய அன்னை பிறந்தநாள் விழா திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆரோக்கிய அன்னை பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் மாதா வேடமணிந்து குழந்தைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.