கடலூர், செப். 10: கடலூர் அருகே பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள மணவெளி கிராமத்தில், பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் தயாரித்த பின்னர் ஏற்படும் கழிவுகளை அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு குடோனில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த குடோனில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் அந்த குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் எழும்பிய புகை வானுயர அளவுக்கு பறந்தது. இதுகுறித்து நிர்வாகத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் நான்கு தீயணைப்பு வண்டிகளை பயன்படுத்தி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.