×
Saravana Stores

இயற்கை 360 degree

நன்றி குங்குமம் டாக்டர்

முருங்கை

‘‘முருங்கையை வெச்சவன் வெறுங்கையோடு போவான்..!” என்பது பழமொழி. அதாவது, முருங்கை மரத்தை வளர்த்தால் பணமின்றி வெறும் கையோடு போகும் நிலை ஏற்படலாம் என்று நம்பப்பட்டதால் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதையே தவிர்த்து விடுவார்களாம். இப்படித்தான் இதன் பொருளை நமக்குச் சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் இதற்கான அர்த்தமே வேறு. பழமொழியின் உண்மை அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள முருங்கையை பற்றி முழுமையாக அறிவது அவசியமாகிறது.

முருங்கை, தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் மிகப் பழமையான மரங்களில் ஒன்று. நமது பால்ய காலக் கதைகளில் ஒன்றான விக்கிரமாதித்யன் கதைகளில் வேதாளம் வசித்ததாகக் கூறப்படும் முருங்கை மரம் தோன்றிய இடம் இந்தியாதான். Moringa oleifera எனும் தாவரப்பெயர் கொண்ட இதில் Moringa என்பது தமிழ் மொழியின் முருங்கையிலிருந்தும் oleifera என்பது லத்தீன் மொழியிலிருந்தும் பெறப்பட்டுள்ளது. எளிதில் ஒடியக்கூடிய கிளைகள் கொண்ட மரம் என்பதால் முரி எனும் Moringa என்றும், எண்ணெய் நிறைந்த விதைகளைக் கொண்டதால் oleifera என்றும் இதன் தாவரப்பெயர் பொருள்படுகிறது.

முருங்கை மரத்திற்கு தமிழில் சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற மாற்றுப் பெயர்கள் இருக்கிறது. ஆங்கிலத்தில் Moringa, Drumstick, Ben tree, Miracle tree, Horse radish tree எனவும் அழைக்கப்படுகிறது.
மண் மணத்துடன் கூடிய முருங்கை இலைகள் கசப்பும், துவர்ப்பும் கலந்த சுவை கொண்டவை என்றால், அதிலிருந்து காய்க்கும் முருங்கை காய்களின் சுவை துவர்ப்பும் இனிப்பும் கலந்தது. இதன் விதைகள் கசப்பு சுவையுடையவை. முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை கூட்டு, முருங்கைப்பூ பொரியல் என பல நூற்றாண்டுகளாக நம்மிடையே அதிகளவுப் பயன்பாட்டில் உள்ள முருங்கையின் இலை மற்றும் காய் மட்டுமின்றி, அதன் காம்பு, பூ, விதை, மரப்பிசின், மரப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை என்றாலும், முருங்கை இலை மட்டும் அதிக ஊட்டச்சத்து காரணமாய், மருத்துவர்களாலும் ஊட்டச்சத்து நிபுணர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஆம். கேரட்டைவிட நான்கு மடங்கு வைட்டமின் ஏ சத்து, வாழைப்பழத்தைவிட மூன்று மடங்கு பொட்டாசியம் சத்து, ஆரஞ்சுப் பழத்தைவிட ஏழு மடங்கு வைட்டமின் சி சத்து என நமது உடலுக்குத் தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் தன்னுள்ளே தேக்கி வைத்துள்ளது முருங்கை இலை. அதிலும் இதிலுள்ள அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை (76%)
மற்றும் அளவான கலோரிகள் (64/100g), அத்துடன் Histidine, Leucine, Lysine, Methionine, Threonine, Valine உள்ளிட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், இரும்புச்சத்து, மாங்கனீஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் உள்ளிட்ட தாதுக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து, ‘இயற்கையின் அதி அற்புத அதிசயம்’ என்று முருங்கை இலையைக் கொண்டாடவும் வைக்கிறது. மேலும் இந்த பசும் இலைகளில் உள்ள Quercetin, Chlorogenic acid, Carotenoids, Zeatin, Beta Sitosterol, Kaemferol உள்ளிட்ட தாவரச்சத்துகள், முருங்கையின் பல்வேறு மருத்துவ குணங்களுக்குக் காரணமாகவும் விளங்குகின்றன. இவையனைத்தையும் கருத்தில் கொண்டே, உலக சுகாதார அமைப்பு முருங்கையை ‘அனைவருக்குமான ஆரோக்கிய உணவு’ என சமீபத்தில் அறிவித்துள்ளது.

கிராமங்களில் இன்றும், ‘முருங்கை தின்னா முன்னூறு வராது’ என்ற சொலவடை பிரபலம். பண்டைய இந்திய மருத்துவத்தில் முருங்கையின் இலை, காய் மற்றும் பூக்கள் 300க்கும் மேற்பட்ட நோய்களுக்கு தீர்வாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த சொலவடை.உண்மையில் உடலுக்கு உடனடிப் புத்துணர்ச்சியை அளிக்கும் முருங்கை இலைகள், ரத்த உற்பத்தி, ரத்தச் சுத்திகரிப்பு, நோயெதிர்ப்புத் திறன், எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை, ஞாபகத்திறன் அதிகரிப்பு, வியர்வை மற்றும் சிறுநீர்ப்பெருக்கம், புற்றுநோய் எதிர்ப்பு என பல்வேறு பலன்களையும் சேர்த்தே அளிப்பதால், இத்தகைய நற்குணங்கள் கொண்ட முருங்கை இலைகளைத் தொடர்ந்து உட்கொண்டால், ரத்த சோகை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், ரத்த நாளங்களில் அடைப்பு, உடல் பருமன், வயிற்று அழற்சி, பெருங்குடல் வீக்கம், மலச்சிக்கல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என பரிந்துரைக்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.

குறிப்பாக இதிலுள்ள அதிகளவு வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்தைக் காப்பதுடன் மாலைக்கண் நோயிலிருந்து பாதுகாப்பளிப்பதால் குழந்தைகளுக்கும் முருங்கை பரிந்துரைக்கப்படுகிறது. ஒருபக்கம் வளரிளம் பருவப் பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளையும் அளிக்கிறது. மற்றொரு பக்கம் கர்ப்ப காலம் மற்றும் பேறு காலத்தில் ரத்த சோகையைத் தவிர்ப்பதிலிருந்து, தாய்ப்பால் சுரப்பு வரை, தாய்க்கும் சேய்க்கும் பற்பல நன்மைகளையும் தருகிறது.

அதேசமயம் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிற்றலில் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கும் முருங்கை பெரிதும் பயனளிக்கிறது. அத்துடன் கூந்தல் மற்றும் சருமத்திற்கு வலிமை சேர்த்து, செல்களின் வீக்கத்தைக் குறைத்து நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டுகிறது. இவையனைத்திற்கும் மேலாய், புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் மட்டுப்படுத்துகிறது.எல்லாம் சரி… முருங்கை என்றவுடன் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அல்லவா நம் நினைவுக்கு வருகிறார்.? அட, ஆமாம். அதுவும் உண்மைதான்.

பிறப்புறுப்பின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, பாலுணர்வைத் தூண்டுவதுடன் ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் பெண்களின் கருவுறுதல் விகிதத்தையும் முருங்கை அதிகப்படுத்துகிறது என்பது சினிமாவின் நகைச்சுவை செய்தி மட்டுமல்ல… உண்மையும் கூட என்றுகூறும் நிபுணர்கள், முருங்கையை ‘இயற்கையின் வயாகரா’ என்றே அழைக்கின்றனர்.பல அரிய மருத்துவ குணங்களை இயற்கையிலேயே கொண்ட முருங்கை இலைகளையும் காய்களையும் உலர்த்திப் பொடி செய்து, பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரப்படுத்தவும் ஆரம்பித்துள்ளன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த Moringa drinks உடனடிப் புத்துணர்ச்சியைத் தருவதால், காஃபிக்கு மாற்றாக (Caffeine free energy drink) என தேநீர் அல்லது சூப்பாக பருகப்படுகிறது. மொரிங்கா கேப்ஸ்யூல்ஸ்களும் அங்கு மிகவும் பிரசித்திப் பெற்று வருகின்றன.

இப்படியாக முருங்கை இலை மட்டுமன்றி, அதன் காய், பூ, விதை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் என அனைத்துமே மேற்சொன்ன மருத்துவ குணங்கள் நிறைந்தவைதான் என்றாலும், விகிதாச்சாரத்தில் மட்டுமே மாறுபடுகிறது. அதில் முற்றிய முருங்கை விதைகள் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. இதன் சத்துக்காக, வறுத்த முருங்கை விதைகளைப் பொடித்து, கோதுமை மாவில் ஊட்டமேற்ற (food fortification) உபயோகிக்கிறார்கள் என்றால், அவற்றின் சுவைக்காக வறுத்த விதைகள் சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உணவாக மட்டுமன்றி, முருங்கை விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் மருந்துகள் தயாரிக்கவும், முக அழகு சாதனங்கள் தயாரிக்கவும், மசக்கு எண்ணெயாகவும், பயோ-டீசலாகவும், விதை எடுத்தபின் இதன் புண்ணாக்கு, நீர் சுத்திகரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மர பிசின் ஜெல்லியாகவும் மேற்பூச்சாகவும் பயன்படுகிறது. அதிக நாட்கள் பூக்கும் தன்மை கொண்ட தாவரம் என்பதால், தேன் எடுக்கவும் முருங்கை பயன்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே முருங்கையின் இலை, பூ, காய்கள் ஒவ்வாமை (allergy) ஏற்படுத்தி, வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பயனுள்ள முருங்கையை வளர்க்க தண்ணீரும் அதிகம் தேவையில்லை. வறட்சியான சூழலிலும் நன்கு வளருகிற முருங்கை, விதைகள் மற்றும் கிளைகள் மூலமாகவே பயிரிடப்பட்டு, ஓரிரு வருடங்களிலேயே மரமாகவும் வளர்ந்துவிடும் என்பதுடன், ஒரே ஒரு வளர்ந்த முருங்கை மரம் வருடத்திற்கு ஏறத்தாழ 500 முதல் 1000 முருங்கைக் காய்களையும், வருடத்தில் ஏழு முறை வரையில் பலநூறு பேருக்குத் தேவையான முருங்கை இலைகளையும் தரவல்லது என்கின்றனர் வேளாண்துறை நிபுணர்கள்.

வருடத்தில் இருமுறை காய்க்கும் முருங்கை, இந்தியா முழுவதிலும் குறிப்பாக ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது என்பது அவர்களின் கூடுதல் தகவல். நமது நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் முருங்கை பெரிதும் பயிரிடப்படுகிறது.

உலகின் பெரும்பகுதியை தனது போர்த்திறத்தால் வெற்றி கொண்ட மாபெரும் வீரரான அலெக்சாண்டர், முருங்கையை தமது முக்கிய உணவாக உண்ட மௌரியர்களிடம் தோற்றார் என்கிறது வரலாறு. உலகப் புகழ்பெற்ற கியூபாவின் புரட்சியாளரான ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த முருங்கையை மருந்தாக பயன்படுத்திய வரலாறும் காணக்
கிடைக்கிறது. நமது ஊரிலிருந்து எகிப்து, கிரேக்கம், ஆப்ரிக்கா என உலகெங்கும் பயணம் செய்த முருங்கை மரத்தை, ‘‘Nebedaye” (Never Die Tree) அதாவது, சாகாவரம் பெற்ற மார்க்கண்டேய மரம் என ஆப்பிரிக்கர்கள் அழைக்கின்றனர்.

முருங்கையின் வரலாறு இப்படியாக இருக்க, ‘‘முருங்கையை வைத்தவன் வெறுங்கையோடு போவான்” என்று எப்படி நமது முன்னோர்கள் சொன்னார்கள்.? வயோதிகத்தில் ஏற்படும் கண் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, எலும்பு புரை, மூட்டு வீக்கம் போன்றவற்றை முருங்கை தடுப்பதால், வயோதிகத்திலும் தடி ஊன்றி நடக்கும் நிலை இருக்காது, கைகளை வீசியே நடக்கலாம் எனச் சொன்னதுதான், தவறாய் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கும் என்பது புரிகிறது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து குடும்ப ஆரோக்கியத்தை காத்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதும் புரிகிறது. இதன் காரணமாகவே நமது சித்தர்களும் முருங்கையை ‘கற்பகத்தரு’ என்று அழைத்தனர். வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேட்கும் கேள்விகளைப் போலவே, முருங்கை தருகின்ற பயன்களுக்கு முடிவே இல்லை என்பதால், சாகாவரம் பெற்ற இந்த மூலிகை நண்பனின் பயன்களை எப்போதும் பெற்று, இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வோம்…!!

(இயற்கைப் பயணம் நீளும்!)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்

The post இயற்கை 360 degree appeared first on Dinakaran.

Tags : Nature ,Saffron ,Dr. ,Murunga ,Dinakaran ,
× RELATED இயற்கை 360°