நன்றி குங்குமம் தோழி
விமானம் அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி பதினைந்து நிமிடங்களும் பறந்துவிட்டன.விமானப் பணிப்பெண் பயணிகள் இருக்கைகளுக்கு முன்னால் வந்து “பயணிகள் கவனிக்கவும். விமானம் இன்னும் சிறிது நேரத்தில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்க உள்ளது. பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டுகளை உடனே அணிந்து ெகாள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். சீட் பெல்ட் அணிவதற்கு எங்கள் உதவி வேண்டுமானால் கேளுங்கள்” என்றார்.
என் அருகிலிருந்த என் கணவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர். “சுற்றுலா வரும் பயணிகளை அன்போடு பேசி வரவேற்பதில் சிங்கப்பூர்க்கார்கள்தான் நம்பர் ஒன்!”என் கணவர் டாக்டர் என்பதால் பிரபல மருந்து கம்பெனி ஒன்று சிங்கப்பூரில் நடத்தும் கான்பரன்ஸ் ஒன்றுக்கு டாக்டர்களை அழைத்திருந்தது. டாக்டர்கள் தங்கள் மனைவியுடன் வரலாம். மதுரையிலிருந்து ஒரு தம்பதி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், கோவில்பட்டி, நாகர்கோவில் என்றும் பல ஊர்களிலிருந்தும் பத்து டாக்டர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டோம். அதில் ஆறு டாக்டர்கள் மட்டும் தங்கள் மனைவியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
‘சிங்கப்பூர்’ போவதென்பது எனது நெடுநாளைய ஆசை. காரணம், என்னுடன் பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்த ராஜேஸ்வரி நான் பிளஸ் டூ படிக்கும்போது தன் பெற்றோருடன் சிங்கப்பூர் வந்துவிட்டாள். பல வருடங்கள் முன்பு சிங்கப்பூரில் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருந்ததாம். அதனால் ராஜேஸ்வரியின் அப்பா தாய்நாட்டிற்கு குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தார். ெகாண்டு வந்த பணத்தில் ஒரு வீடு கட்டினார்.
சொந்தமாக ஜவுளி வியாபாரமும் ஆரம்பித்தார். வியாபாரம் அவர் எதிர்பார்த்தது போல் செழிப்பாக இல்லை. அதனால் கடை மற்றும் வீட்டை விற்றுவிட்டு சிங்கப்பூருக்கே திரும்பினார். ராஜேஸ்வரி சிங்கப்பூர் திரும்பி இரண்டு மாதம் கழித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தாள். பதிலுக்கு நானும் கடிதம் எழுதினேன். சுமார் இரண்டு வருடங்கள் கடிதங்கள் மூலம் தொடர்பு நீடித்தது. கடைசியாக அவள் கடிதம் எழுதும்போது தாங்கள் வேறு ஒரு வீட்டிற்கு மாறிப் போவதாகவும் புதிய விலாசம் முடிவானதும் கடிதம் எழுதுவதாக எழுதியிருந்தாள். அதே சமயத்தில் என் அப்பாவுக்கும், வெளியூருக்கு மாறுதல் கிடைத்து நாங்களும் ராஜபாளையம் சென்றோம். இருவரின் விலாசம் மாறிவிட்டதால் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்குத் திருமணமாகி மகள் பிறந்தபோது என் சிநேகிதி பெயரில் பாதியை சேர்த்து ‘ராஜகுமாரி’ என்று பெயர் வைத்தோம்.
இப்போது சிங்கப்பூருக்குப் போகிறோம் என்றதும் என் மனதில் பரபரப்பு! ராஜேஸ்வரியை பார்க்க முடியுமா என்று ஏக்கம் ஏற்பட்டது. என் மகள் என்னிடம், “அம்மா! உங்கள் உண்மையான நட்பு கண்டிப்பாக இருவரையும் சந்திக்க வைக்கும்” என்று பெரிய மனுஷி போல கூறி வழியனுப்பினாள்.விமான நிலையத்தில் எங்களை வரவேற்க மருந்துக் கம்பெனிக்காரர்கள் வந்திருந்தார்கள். அன்று முழுவதும் ‘ஜெட் லாக்’ இருக்கும் என்பதால் ஹோட்டலில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியும், மறுநாள் சிங்கப்பூர் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், 2-வது, 3-வது தினங்களில் டாக்டர்களுக்கு கருத்தரங்கு அதே ஹோட்டலில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்கள்.
மறுநாள் நாங்கள் ‘சென்தோஸா’ என்ற கேளிக்கைத் தீவுக்கு சென்றோம். சென்தோஸாவில் வண்ணப்பூச்சிகளின் தோட்டம், நீருக்கடியில் மீன் காட்சியகம், டால்பின் மீன்கள் நடத்திய மேஜிக் காட்சிகள், யுனிவர்ஸல் ஸ்டுடியோ கண்காட்சி என்று பல்வேறு இடங்களை கண்டு மகிழ்ந்தோம். சிங்கப்பூர் எங்கு பார்த்தாலும் அற்புதமான மரத்தோட்டங்கள், சுத்தமான புல்வெளிகள், சிறந்த உணவகங்கள் என நாள் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். எங்களுடன் சிங்கப்பூரில் கம்பெனி மேனேஜர் பத்மநாபன் வந்தார்.
அவரிடம், நான் என் சிநேகிதியின் முந்தைய விலாசத்தைக் கொடுத்து, அவள் பனிரெண்டு வருடங்கள் முன்பு வீடு மாற்றியது குறித்து தெரிவித்தேன். அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று அவரிடம் உதவி கேட்டேன். அவர் நான் சொன்ன விலாசத்தில் பனிரெண்டு வருடங்கள் முன்பு இருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் என்றவர், ‘‘உங்கள் சிநேகிதியின் அப்பா என்ன வேலை பார்த்தார்? ஞாயிற்றுக்கிழமை நேரில் போய் விசாரிக்கிறேன். நீங்கள் இரண்டு நாட்கள்தான் இருப்பீர்கள். அதற்குள் கண்டுபிடிக்க முடியாது. சென்னை போன பிறகு கூட நான் விசாரித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்’’ என்றார்.
நம்பிக்கை என்ற காற்றினால் நிரம்பியிருந்த என் மனது ‘புஸ்’ஸென்று அடங்கிவிட்டது. சென்னை அல்லது கோயம்புத்தூரில் பத்து வருடத்துக்கு முன்னால் உள்ள விலாசத்தை வைத்து ஒருவரைத் தேடிப்பிடிப்பது எவ்வளவு கஷ்டம். ஆனால் என் மகள் சொன்னது திரும்பவும் நினைவுக்கு வந்தது. உண்மையான நட்பு என்பதால் எப்படியாவது வழி தெரியும். கண்டிப்பாக ராஜேஸ்வரியை நான் கண்டுபிடிப்பேன் என்று மனதில் லேசாக நம்பிக்கையும் வந்தது.
அடுத்தநாள் சிங்கப்பூர் நதியில் படகு சவாரி. பிறகு ‘ப்ளையர்’ என்ற நூறு மீட்டர் உயரம் கொண்ட ராட்சத ராட்டினம் அழைத்துப் போனார் பத்மநாபன். சாப்பாட்டுக்குப் பிறகு ‘ஹனிபாஸ்’ என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு போவதாகத் திட்டம். அங்கு போவதற்கு முன் அருகில் உள்ள ‘சப்வே’ ரெஸ்டாரென்டில் சாப்பிட அழைத்து சென்றார். எங்களுக்கும் வெயிலில் நடந்ததால் களைப்பாக இருந்தது. நாங்கள் போன நேரம் அதிகம் கூட்டமில்லை.
என்ன சாப்பிடலாம் என்று மெனுகார்டை பார்த்தோம்.“ராஜி! இங்கே வந்து பார். தமிழ்நாட்டிலிருந்து விருந்தினர் வந்திருக்கிறார்கள்” என்று மேனேஜர் போல் தோன்றியவர் யாரையோ கூப்பிட்டார். “ராஜி” என்று அழைத்த குரல் என் காதில் தேனாக இனித்தது. அதே சமயம் சல்வார் மற்றும் சட்டைக்கு மேல் கிச்சன் அங்கி அணிந்த பெண் வேகமாக வெளியே வந்தாள்.
ஒரு கனம் நான் மூச்சுவிட மறந்துவிட்டேன். அது என் சிநேகிதி ராஜேஸ்வரிதான். “ஏய், ராஜேஸ்வரி” என்று பலமாக நான் கூப்பிட்டதும் திடுக்கென்று என்னைப் பார்த்து “ஓ! டியர் சுந்தரேஸ்வரி! நீதானா” என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். மிகுந்த ஆனந்தத்தில் எங்களுக்கு அதிகமாக பேசகூட வரவில்லை.
“உன்னைப் பார்க்க முடியுமோ, முடியாதோ என்று பெரும் கவலைப்பட்டேன். நல்ல வேளை கடவுள் உன்னை எனக்கு காண்பித்துவிட்டார்.”நான் பேசிக்கொள்வதைப் பார்த்ததும் பத்மநாபன் ஆச்சரியத்துடன் “மேம்! இவர்கள்தான் நீங்கள் என்னிடம் சொன்ன உங்கள் சிநேகிதியா? பரவாயில்லை நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். தேடி வந்த சிநேகிதியை பார்த்துவிட்டீர்கள்” என்றார். ராஜேஸ்வரியின் கணவரும் ஆச்சரியத்துடன் “என்ன ராஜி! தமிழ்நாட்டிலிருந்து யார் வந்தாலும் மதுரை சுந்தரேஸ்வரியை தெரியுமா என்று விசாரிப்பாயே.
அந்த ஃப்ரெண்டு இவங்கதானா?” என்று கேட்டுவிட்டு, ராஜி பதினைந்து வருடங்களாக தினமும் உங்களைப் பற்றியே பேசுவாள். எனக்கும் அவ்வளவு அருமையான சிநேகிதியை பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. உங்கள் பெயரைத்தான் எங்கள் மகனுக்கு வைத்திருக்கிறோம். எங்கள் மகன் சுந்தர் இப்போது யுனிவர்சிட்டிக்கு போயிருக்கிறான். உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவான்” என்று மூச்சுவிடாமல் பேசினார்.
தன் மகனுக்கு என் பெயரை வைத்திருப்பதை அறிந்ததும் எனக்கும் ஆச்சரியம். என் மகளுக்கு உன் பெயரைச் சேர்த்து ராஜகுமாரி என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னதும் நாங்கள் பேசுவதைக் கேட்ட எங்கள் குரூப் மெம்பர்கள் யாவருக்கும் வியப்பு!“பரவாயில்லை. உண்மையான சிநேகிதிகளை நம்ம பத்மநாபன் சார் சேர்த்து வைத்துவிட்டார்” என்று பாராட்டினார்கள். பத்மநாபன் சொன்னார் “எல்லாம் கடவுள் செயல். சிங்கப்பூரில் இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் என்று நேற்று கூடச் சொன்னேன்.”
சப்வேயில் வெஜிடபிள் ரோல் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
இந்தக் கடையை துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சென்காங்கிலிருந்து வீடு மாற்றிய பின் ‘பாசிர் ரிஸ்’ பகுதியில் வீடு வாங்கி செட்டிலாயிட்டோம். அப்பா இறந்துவிட்டார். அம்மா எங்க கூடத்தான் இருக்காங்க. ஒரே மகன், யுனிவர்சிட்டியில் படிக்கிறான்” என்று சொன்னவள் “உன் மகள் என்ன படிக்கிறாள். உன்னைப் போல இருப்பாளா” என்று கேட்டாள். எனது செல்போனில் பதிவு செய்திருந்த என் மகள் புகைப்படத்தைக் காண்பித்தேன்.“பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நீ இதேபோலத்தான் இருப்பாய்” என்று என் மகள் படத்திற்கு முத்தம் பதித்தாள்.
‘‘நான், என் கணவரும் மற்றும் டாக்டர்களும் கான்பரன்ஸிற்காக வந்திருக்கிறோம். ‘மண்டாரின்’ ஹோட்டலில் தங்கியிருக்கிறோம். அடுத்து நாங்கள் ‘ஹனிபா’ போவதாக இருக்கிறோம்’’ என்று சொன்னேன். ராஜி சொன்னாள் “ஹனிபா தானே. இவர்கள் முன்னாலே போகட்டும். எனக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் வேலை. நாம் இருவரும் ஒருமணி நேரம் கழித்து ஹனிபா போவோம்” என்றாள்.
ரெஸ்டாரென்ட் வாசலில் குரூப் உறுப்பினர்களுடன் நானும், ராஜேஸ்வரியும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்ெகாண்டோம். என்னுடன் வந்த அனைவரும் ஹனிபா புறப்பட்டு சென்றார்கள். தாமதம் செய்யாமல் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு பத்மநாபன் போனார். ஒரு மணி நேரம் கழித்து நானும் ராஜேஸ்வரியும் புறப்பட்டோம். அவள் கடையிலிருந்து சுமார் அரைமணி நேரம் பயணத்தில் வந்துவிட்டது. உடன் இருந்த நேரம் முழுவதும் பேசிக்கொண்டே சென்றோம்.
எங்கள் உடன் படித்த மற்ற சிநேகிதிகள், கற்றுக்கொடுத்த ஆசிரியைகள் பற்றி விசாரித்தாள். பிறகு என் மகளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டே வந்த ராஜேஸ்வரி தங்க நகைகள் பிரிவில் ஒரு ஜோடி வளையலைத் தேர்ந்தெடுத்தாள். “இந்த வளையல்களை உன் மகளுக்கு அன்புப் பரிசாக கொடு” என்று கைகளில் திணித்துவிட்டாள். எனக்கு அவளது அன்புக்கு என்ன பரிசு கொடுப்பதென்று தெரியவில்லை. பட்டுப்புடவைகள் பிரிவில் ரோஸ் கலரில் ஒரு சேலையை தேர்ந்தெடுத்தேன். பணம் கட்டி வாங்கியதும் ராஜேஸ்வரிக்குப் பரிசாக அளித்தேன்.
உன் மகனை நான் பார்க்கவில்லையே என்று என் ஏமாற்றத்தை சொன்னேன். “கவலை வேண்டாம் நாளை அவனுக்கு லீவுதான். ஏர்போர்ட்டிற்கு அழைத்து வருகிறேன்” என்று சொன்னாள்.கடைசி நாள்-நாங்கள் புறப்படும் நாள்.
விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரம் முன்னதாகவே வந்துவிட்டோம். என் கணவரை ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தினேன். “உங்க ஃப்ரெண்டு உங்களைப் பார்க்காமல் சென்னைக்குத் திரும்ப புறப்படுவாளா? என்று சந்தேகப்பட்டேன். நல்லவேளை நீங்கள் சந்தித்துக் கொண்டீர்கள். இந்தியாவுக்கு வந்தால் மதுரையில் எங்கள் வீட்டில் ஒருவாரம் தங்குவதுபோல திட்டம் போட்டு வரவேண்டும்” என்று கூறினார். ராஜியின் மகன் சுந்தரைப் பார்த்தபோதும் பரவசம்தான். “ஆன்ட்டி, ஆன்ட்டி” என்று பத்து தடவை சொல்லி என் கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டான்.விமான நிலையத்தில் “செக் இன்” செய்து போர்டிங் பாஸ் வாங்கிய பிறகும் ராஜி குடும்பத்தாரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். என் கால்கள் சிங்கப்பூரை விட்டு நகர மறுத்தன. பிரியமான சிநேகிதியை பிரியும்போது வருத்தமாகத்தான் இருந்தது.
தொகுப்பு: சக்திவடிவேல்
The post சிங்கப்பூர் சிநேகிதி appeared first on Dinakaran.