×
Saravana Stores

சுயசக்தி விருதுகள்

நன்றி குங்குமம் தோழி

தனித்திறமை வாய்ந்த பெண்களை அடையாளப்படுத்தும் விதமாக ஆச்சி மசாலாவின் சுயசக்தி விருதுகள் வருடந்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. சுய தொழில், கல்வி மற்றும் இலக்கியம்,
விவசாயம், கலைத்துறை, வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் இல்லத்தரசிகள், மருத்துவம், ஒப்பனை, ஊடகங்களில் சிறந்து விளங்குதல், விளையாட்டு துறை, உணவு சம்பந்தப்பட்ட துறை, சமூக சேவைகள், சுற்றுச்சூழல் சார்ந்த வேலைகள், இந்தியாவில் வாழும் பெண்களில் சிறந்தவர்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட விருதுகளுக்கான நேர்காணல் மற்றும் விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதில் சாதனா சரஸ்வதி, பூஜிதா பாலசுப்ரமணியம், தேவகி பாலாஜி, சரஸ்வதி அசோகன், சாருபிரபா, ஐஸ்வர்யா, லாவண்யா, கிருத்திகா, தமிழ் அருவி, ரூபா, ஜெய, சர்மிளா, அகல் ஃபவுண்டேஷன், விடியல் மகளிர் குழு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமச்சந்திரன் விவரித்தார்.‘‘பெண்கள் வீட்டையும் பார்த்துக் கொண்டு தங்களின் கனவுகளையும் நோக்கி பயணித்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் வேலைக்கு செல்வார்கள், மற்றவர்கள் சுய தொழில் செய்வது, கலைத்துறை, எழுத்து துறை, கல்வி என பல வகைகளில் தங்களை இணைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கான அடையாளமோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பெண்களை அங்கீகரித்து அடையாளப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த சுயசக்தி விருதுகள். ஒவ்வொரு வருடமும் இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். விரும்பும் பெண்கள் அதனை விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களை நேரில் அழைத்து அவர்களின் முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்வோம்.

அதில் மிகவும் கடினமான சூழலில் இருந்து முன்னேறி இருக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறோம். இந்த விருதினை வழங்குவதன் மூலம் முன்னேறி நல்ல நிலைமையில் இருக்கும் பெண்களை சந்தித்து அவர்களை அடையாளப்படுத்தும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்துள்ளதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இல்லத்தரசியாக இருந்து சாதனைப் படைத்திருக்கும் பெண்களின் கதைகள் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் அவர்களின் பலம் புரியும். அதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்பதை உணரச் செய்கிறோம். பல பெண்களின் பொருளாதாரத்தை நம்பித்தான் அந்தக் குடும்பமே இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட சேமிப்பு அவசியம். பெண்களை கருணையாக பார்க்காமல் அவர்களுடைய திறமையை பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதனால் தொடர்ந்து இந்த மாதிரி பல பெண்களை அடையாளப்படுத்தி வருகிறேன்’’ என்றார் ஹேமச்சந்திரன். இவரை தொடர்ந்தார், வேல்ஸ் குரூப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இந்த விருதின் நடுவரான பிரித்தா கணேசன்.

‘‘இரண்டாவது முறையாக நான் இந்த விருதின் நடுவராக இருக்கிறேன். ஒவ்வொரு துறையில் இருந்தும் விருதுக்காக விண்ணப்பித்த பெண்களுக்கு நேர்முகத் தேர்வினை நடத்துவோம். அதில் சிறந்து விளங்கும் பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் கதையினை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கும். தொழில்நுட்பம் இல்லாத பின்தங்கிய கிராமங்களிலிருக்கும் பெண்கள் கூட புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

அவர்களின் கனவுக்கு கணவர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த விருதுகளை ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவர்கள் செய்துள்ள சாதனையை பொருத்துதான் தேர்வு செய்கிறோம். முக்கியமாக பெண்ணிடம் நான் பார்ப்பது கல்வித் தகுதி. பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. அதிலும் குறிப்பாக மருத்துவம் சார்ந்த துறையை சேர்ந்தவர்களை நான் தேர்வு செய்கிறேன். அந்த துறையில் அவர்கள் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள் என்று பார்ப்பேன். அடுத்து அவர்களின் வாழ்க்கை மற்றும் கனவுகள் குறித்துதான் ஒருவரை தேர்ந்தெடுக்கிறேன். மருத்துவ துறையில் பல பெண்கள் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்கிறார்கள். அதை பார்க்கும் போது மனநிறைவாக இருக்கிறது’’ என்கிறார் பிரித்தா கணேசன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post சுயசக்தி விருதுகள் appeared first on Dinakaran.

Tags : Autonomy Awards ,SAFFRON ,ACHI MASALA ,Dinakaran ,
× RELATED சாக்லேட் பட்டாசுகள்!